சிலாங்கூர் மாநில அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் வாங்கிய புக்கிட் ராஜா தொழில் பேட்டை நிலத்தில் எந்த மேம்பாட்டையும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம் அனுமதிக்காது.
“அந்த நிலத்தின் மீது எந்த மேம்பாடு அல்லது வர்த்தகம் தொடர்பில் எந்தப் பேரம் நடத்தப்பட்டாலும் அது மாநில அராசங்கத்துக்குத் தெரியாமல் நடத்தப்பட்டதாகவே கருதப்படும். ஆகவே சிலாங்கூர் அதனை அங்கீகரிக்காது,” என மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த நிலச் சொத்து மாநிலத்திடமிருந்து கூட்டரசு நில ஆணையாளரிடம் வழங்கப்பட்ட போது இராணுவப் பயிற்சி முகாம்களை அதில் கட்டுவதே நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த மேம்பாட்டைத் தவிர வேறு எந்த மேம்பாட்டையும் நாங்கள் அந்த இடத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் காலித் சொன்னார்.
“தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டது போல அங்கு இராணுவப் பயிற்சி முகாம்கள் கட்டப்படுவதை தவிர வேறு எந்த மேம்பாட்டுக்கும் நாங்கள் அந்த நிலத்தை அங்கீகரிக்க மாட்டோம். அதுவும் சிலாங்கூர் ஆட்சி மன்றம், சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே செய்ய முடியும்,” என்றும் காலித் தெரிவித்தார்.
நேற்று மந்திரி புசார் தலைமை தாங்கிய சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் அந்த முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் முன்னதாக மாநில நில, கனிவள அலுவலக அதிகாரிகளும் மூன்று மாவட்ட அதிகாரிகளும் விளக்கமளித்தார்கள்.