-கி.தமிழ்ச்செல்வம், இரண்டாம் துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 3, 2013.
வஞ்சிக்கப்பட்ட மலேசிய ஏழை இந்தியர்களின் விடியலுக்கான செயல் திட்ட வரைவு குறித்து, பாரிசான் நேசனல் அரசியல் கூட்டணியிடம் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்துமா? இந்த கேள்வி இப்போது அரசியல் ஆய்வளார்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.
இந்த கேள்விக்கான பதிலை எதிர்பார்பதர்க்கு முன், மலேசிய இந்தியர்கள் எதிர்கொண்ட நெடு நாளைய சமூக பொருளாதார புறக்கணிப்புக்கு, நிரந்தர தீர்வுகளின் வழி முற்றுப் புள்ளி வைத்து, ஒரு புதிய அத்தியாயம் உடனடியாக துவங்கப் பட வேண்டும் என்ற ஹிண்ட்ராப் அமைப்பின் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நாம் தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
மலேசிய இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிரந்தர் தீர்வை பற்றி சிந்திக்காமல், அதனை ஒரு பொருட்டாக கருதாமல் வெறும் அரசியல் விளம்பரத்திக்கு மட்டுமே பக்காத்தான் மற்றும் பாரிசான் அரசியல்வாதிகள் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள். இந்நிலையை இனியும் தொடரவிடக் கூடாது . நம் எதிர்கால சந்ததியினராவது இந்த மலையகத்தில் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவானதுதான், அடுத்த ஐந்து ஆண்டிற்கான ஹிண்ட்ராப் செயல் திட்ட வரைவாகும்.
இதுகுறித்து பாரிசான் மற்றும் பக்காத்தான் ஆகிய இரு தரப்பினரிடமும் விவாதிக்கும் தனது என்னத்தை ஹிண்ட்ராப் வெளிப்படுத்தி இருந்தது. இதுவரை பக்கத்தான் தரப்பினரிடம் மட்டுமே மேலோட்டமான பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. கொள்கை அளவில் ஒப்புக் கொள்வதாக, பட்டும் படாமளும்தான் பக்காத்தான் ராக்யாட் தலைவர்களின் போக்கு இருக்கிறதே தவிர, ஒரு திடமான நம்பிக்கை தரக் கூடிய வகையில் தீர்க்கமான ஒப்புதலை அவர்கள் இதுவரையில் அளிக்க முன்வரவில்லை.
இப்படி எத்தனையோ உதட்டளவிலான ஒப்புதல்களையும், கொள்கை அளவிலான சம்மதங்களையும் கண்ட சமுதாயம் நம் சமுதாயம். தொடர்ந்து ஏமாற்றப்பட்ட மலேசிய இந்திய சமூகத்தை ஹிண்ட்ராப் மீண்டும் அப்படி ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்ல தயாராக இல்லை. எனவேதான் எழுத்து பூர்வமானஒப்பந்த்தத்தில் ஹிண்ட்ராப் திட்டவட்டமாக இருக்கிறது. எழுத்து பூர்வ ஒப்பந்தத்திற்கு சாதகமான எந்த ஒரு அறிகுறிகளும் பக்கத்தான் ராக்யாட் தலைவர்களிடமிருந்து இது வரை வரவில்லை. அவர்கள் தொடர்ந்து காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த 13 ஆவது பொதுத்தேர்தல் வரை இப்படியே இழுத்துக்கொண்டு போய் விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. இந்தியர்களின் சமூக பொருளாதார அவலங்களை களைவதில் அவர்களுக்கு என்னதான் தயக்கமோ, புரியவில்லை.
ஹிண்ட்ராப் அமைப்பை பொறுத்த வரையில் இந்தியர்களின் அவலங்களை நிறைவுக்கு கொண்டு வருவதில் பக்காத்தான் உறுதியான உடன்படிக்கைக்கு தயார் என்றால், அடுத்த பொதுத்தேர்தலில் அவர்களுடன் கைகோர்க்க முழு ஆயத்த நிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியர்களின் வாக்கு மட்டும் வேண்டும் அவர்களின் பிரச்சனைகளை பிறகு பார்த்துக் கொள்கிறோம் என்றால் அதனை நம்பி ஏமாறுவதற்கு ஹிண்ட்ராப் ஒன்றும் தலையாட்டி பொம்மை அல்ல.
இந்நிலையில்தான் ஹிண்ட்ராப், பாரிசன் கூட்டணியுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறதா என்று அரசியல் ஆர்வலர்களும் , பார்வையாளர்களும் எழுப்பும் குரல் நாளுக்கு நாள் உரக்க ஒலிக்க துவங்கி இருக்கிறது.
இந்தியர்களுக்கான பரிந்துரையை ஏற்று நடைமுறைப் படுத்தி தீர்வுக காண பக்காத்தான் ஆர்வம் கொள்ளவில்லை என்றால் அடுத்த பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் அமைப்பின் ஆதரவு அவர்களுக்கு தேவை இல்லை என்பதாகத்தான் நாம் அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கும். அதனை பக்கத்தான் தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்தே ஆக வேண்டும். அப்படி ஒரு முடிவுக்கு பக்கத்தான் வந்துவிட்ட நிலையில்அவர்களை தொடர்ந்து நிர்பந்தப் படுத்தவும் ஹிண்ட்ராப் அமைப்பு தயாரக இல்லை.
பக்கத்தான் ஆதரவு அளிக்கவில்லை என்பதால், ஏழை மலேசிய இந்தியர்களுக்கான தர்ம போராட்டத்தை ஹிண்ட்ராப் முடித்துக் கொள்ளவேண்டும் என்று அர்த்தமில்லை. தொடர்ந்து இந்தியர்களை தேசிய முன்னேற்ற நீரோட்டத்தில் எப்படி இணைத்து வெற்றியடைவது என்பதில் ஹிண்ட்ராப் கவனம் செலுத்தி போராட்டத்தை தொடர்ந்தே ஆகவேண்டும்.
அந்த வகையில் ஹிண்ட்ராப் அமைப்பிற்கு இருக்கும் அடுத்த ஒரே தேர்வு பாரிசான் கூட்டணி மட்டுமே என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் கிடையாது.
கடந்த 55 ஆண்டுகளாக இந்தியர்களை புறக்கணித்த பொறுப்பை முழுமனதுடன் அம்னோ தலைமையிலான பாரிசான் கூட்டணி ஏற்றுக்கொண்டு , அந்த தவற்றிற்கு பிராயச்சித்தமாக ஹிண்ட்ராபின் நியாயப் பூர்வமான செயல் திட்ட வரைவை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒப்பந்த்ததிற்கு சம்மதம் அளிக்க தயார் என்றால் அதனை பரிசீலிக்க ஹிண்ட்ராப் தயங்காது.
இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியர்களை புறக்கணித்த பாரிசான் அரசை எப்படி நம்ப முடியும் என்ற கேள்வியை மக்களும்,அரசியல் ஆராய்ச்சியாளர்களும் எழுப்பலாம். சந்தேகத்திற்கு இடமின்றி தங்களின் மனமாற்றத்தை அம்னோ எப்படி நிரூபிக்க வேண்டும் என்பது குறித்து ஹிண்ட்ராப் அமைப்பின் மேல்நிலை பொறுப்பாளர்கள் சிந்திக்க துவங்கி இருக்கின்றனர் . அப்படி ஒரு திருப்பம் ஏற்ப்படும் போது அந்த விவரங்கள் பகிரங்கப் படுத்தப் படும்.
எனவே பாரிசான் கூட்டணியுடன் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்துமா என்ற கேள்விக்கு – பதில், மலேசிய இந்தியர்களின் அவலத்தை போக்குவதில் பக்காத்தான் எவ்வளவு ஆழமான ஈடுபாட்டை கொண்டிருகிறது என்பதை பொறுத்தே இருக்கிறது.
பக்காத்தான் தலைவர்கள் ஹிண்ட்ராப் முன்மொழிந்திருக்கும் செயல் திட்ட வரைவுக்கு பதிலாக, இவ்வளவு நாட்களாக இல்லாமல் இப்பொது திடீரென்று வேறு ஒரு திட்டத்தை அறிவித்தாலும் நாம் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அது இந்தியர்களின் பார்வையை அடுத்த போது தேர்தல் வரை மறைக்கும் வெறும் புகை மூட்டமாகத்தான் இருக்க முடியுமே தவிர அதில் உண்மை இருக்காது.
வெறும் ஆட்சி மாற்றத்தில் மாத்திரம் ஹிண்ட்ராப் அமைப்பிற்கு நாட்டம் கிடையாது. நமக்கு வேண்டியது மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார அவலங்களுக்கான நிரந்தர தீர்வு மாத்திரமே. முடிவு பக்காத்தான் தலைவர்கள் கையில் !