பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல்கொடுத்துவந்த நிலையில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ, பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இவரின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக வதிவிடத்தில் இவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழும் சிகிச்சையின் கீழும் இருந்துவருவார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவரது மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்யும் விதமாக நடக்கவுள்ள அறுவை சிகிச்சைக்காக இவர் மீண்டும் மருத்துவமனைக்கு வர வேண்டும்.
கடந்த அக்டோபரில் மலாலா தலையில் சுடுபட்டபோது, இடது கண்ணுக்கு சற்று மேலே பாய்ந்திருந்த தோட்டா, அவரது மண்டை ஓட்டைத் துளைத்து மூளையில் உரசி நின்றிருந்தது.
பாகிஸ்தானிலேயே இந்த தோட்டா அகற்றப்பட்ட நிலையில் இவர் மேலதிக சிகிச்சைக்காக பிரிட்டன் கொண்டுவரப்பட்டிருந்தார்.
மலாலாவுக்கு பிரிட்டனில் நிரந்திர வதிவிடம் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
பர்மிங்ஹாம் நகரில் ராஜீயத்துறை அலுவலகத்தில் மலாலாவின் தந்தைக்கு மூன்று வருட காலத்துக்கு வேலை ஒன்று கிடைத்துள்ளது.