ஒட்டிப் பிறந்து உயிராபத்து விளைவிக்கக் கூடிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள், அந்த அறுவை சிகிச்சை நடைபெற்று 3 வருடங்களாகியும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாது எப்போதும் இணைந்த நிலையில் காணப்படும் விசித்திர சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.
அன்ஜி என்பவருக்கும் அல்ஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவரது கணவர் அஸெடினுக்கும் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த ஹசன் மற்றும் உசைன் ஆகிய ஆண்குழந்தைகளே உடல் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.
இந்நிலையில் அக்குழந்தைகள் பிறந்து 6 மாதத்தின் பின்னர் கிரேட் ஓமன்ட் வீதி மருத்துவமனையில் உயிராபத்து மிக்க 14 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர். எனினும் பிரிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் அக்குழந்தைகள் தாம் ஒருவருடன் ஒருவர் இணைந்திருப்பது போன்று தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
தாயின் கருப்பையில் இருந்தபோது அக்குழந்தைகள் எவ்வாறு கரங்களைப் பற்றியிருந்தனவோ அவ்வாறே தற்போதும் உறங்குகையில் கரங்களைப் பற்றியிருப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.