தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நலன்களை மஇகா தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதிலிருந்து பகுதி உதவி பெறும் 145 தமிழ்ப் பள்ளிகளை மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஒதுக்கி வைத்துள்ளதாக அது கூறியது.
அந்தப் பள்ளிகள் அனைத்தும் மொத்தம் வெறும் 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளை மட்டுமே கோரியுள்ளது தமக்குத் தெரிய வந்துள்ளதாக நியாட் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் சொன்னார்.
அரசாங்கம் அறிவித்த 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டில் 224 தமிழ்ப் பள்ளிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
“என்றாலும் அந்த 145 பள்ளிக்கூடங்கள் அதில் சேர்க்கப்படவில்லை. இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவெனில் அவற்றுக்கு உதவி கிடைக்காது என்பதை மஇகா தெரிவிக்காததால் அவை இன்னும் உதவி கிடைக்கும் என நம்பிக் கொண்டிருப்பதாகும்.”
“அந்தப் பள்ளிக்கூடங்கள் 15,000 ரிங்கிட் முதல் 20,000 ரிங்கிட் வரை பெறும் சிறிய அடிப்படை வசதித் திட்டங்களுக்கு நிதி உதவி கோரியுள்ளன. அந்தப் பள்ளிக்கூடங்களுக்காக மிகவும் சிறிய தொகையான 4 மில்லியன் ரிங்கிட்டை ஏன் மஇகா கேட்கக் கூடாது,” என தஸ்லீம் வினவினார்.
“அந்த கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற மஇகா தவறியிருப்பது இந்திய சமூகத்தைப் பிரதிநிதிப்பதில் அந்தக் கட்சி தோல்வி கண்டு விட்டதைக் காட்டுகிறது”, என்றும் அவர் சொன்னார்.
நியாட் அடுத்து வரும் வாரங்களில் அந்த 145 பள்ளிகளின் பெயர்களையும் வெளியிடும் என்றும் தஸ்லீம் தெரிவித்தார்.
மஇகா தலைவர் பழனிவேல் விடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள 145 பள்ளிக்கூடங்களின் பட்டியலை குறிப்பிட்டு கல்வி அமைச்சுக்கும் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசினுக்கு 2012 ஏப்ரல் மாதம் எழுதிய கடிதம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
“பழனிவேல் எழுதிய கடிதம் உட்பட விவரங்களை நான் வழங்குவேன்”, என தஸ்லீம் சொன்னார்.
‘மஇகா மௌனம் காக்கிறது’
அந்த விஷயம் மீது மஇகா கல்விப் பிரிவு மௌனமாக இருக்கிறது என்றும் அது இந்தியர் நலன்களைப் பிரதிநிதிப்பதால் அவ்வாறு இருக்கக் கூடாது என்றும் நியாட் தலைவர் குறிப்பிட்டார்.
Pusat Khidmat Kontraktor என்ற குத்தகையாளர் சேவை மய்யத்திலிருந்து அனுமதிகளைப் பெறுவதற்கு பதிவு செய்வதில் பிரச்னைகளை எதிர்நோக்கும் இந்தியக் குத்தகையாளர்களுக்கு விலக்கு அளிக்குமாறும் தமிழ்ப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கான வேலைகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதற்கு மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் ஏன் தாமதமாக விண்ணப்பம் செய்தார் என்றும் தஸ்லீம் கேள்வி எழுப்பினார்.
இந்தியக் குத்தகையாளர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரி கடந்த ஆண்டு மே 23ம் தேதி சுப்ரமணியம் எழுதியுள்ள ஒரு கடிதத்தையும் அவர் காட்டினார்.
“2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் செப்டம்பர் 2011ல் சமர்பிக்கப்பட்ட வேளையில் மஇகா பேராளர் மே மாதம்தான் அதாவது 2012ம் ஆண்டில் பாதி கிட்டத்தட்ட முடிந்த பின்னரே விலக்கு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.”
“அதனால் அந்த 224 பள்ளிகளுக்கு அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கான குத்தகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படும். அத்துடன் குத்தகையாளர்களை நியமிப்பதை கல்வி அமைச்சு செய்து வருகின்றது,” என்றார் அவர்.
அந்த மய்யத்தில் பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர்கள் மட்டுமே கல்வி அமைச்சில் அடிப்படை வசதி வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
அது குறித்து மஇகா விளக்கமளிக்க வேண்டிய அவசியமுள்ளதாகவும் தஸ்லீம் சொன்னார். அது இந்திய சமூகத்தைப் பிரதிநிதிப்பதில் கட்சியின் திறமையை காட்டுகின்றது என்றார் அவர்.
அந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பற்றி மஇகா-வும் அரசாங்கமும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். தமிழ்ப் பள்ளிகளுடைய நலனுக்கு ஏற்கனவே எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அறிவிக்க வேண்டும்.”
“2012ல் 10 மில்லியன் ரிங்கிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கேள்விப்படுகிறேன். எஞ்சியுள்ள 90 மில்லியன் ரிங்கிட்டின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை.”

























