பினாங்கு துணை முதலமைச்சர் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி கைது செய்துள்ளது

MACC logoபினாங்கு துணை முதலமைச்சர்களில் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல் எனக் கூறப்படுவதின் தொடர்பில் கைது செய்துள்ளது.

ஜனவரி மூன்றாம் தேதி சோதனை ஒன்றின் போது எம்ஏசிசி கைது செய்த மூன்று தனிநபர்களில் அந்த உதவியாளரும் ஒருவர் எனத் தெரிகிறது. அந்த மூவரில் மாவட்ட அதிகாரி ஒருவரும் அடங்குவார்.

ஒரு தனிநபர் மாது ஒருவரிடம் 30,000 ரிங்கிட் லஞ்சம் கொடுக்கும் முயற்சிக்கு அந்த உதவியாளர் சாட்சியாக இருந்ததாக மிங்குவான் மலேசியா தெரிவித்தது.

அந்த உதவியாளர் பினாங்கு துணை முதலமைச்சர்களில் ஒருவருக்கு வேலை செய்ததை எம்ஏசிசி புலனாய்வு இயக்குநர் முஸ்தாபார் அலி உறுதி செய்ததாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.

ஆனால் அந்தச் செய்தில் அந்தத் துணை முதலமைச்சர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

உயர் நிலை அரசாங்க அதிகாரி ஒருவருக்கு எதிரான காமத் துன்புறுத்தல் புகாரை அந்த மாது மீட்டுக் கொள்வதற்கு ஊக்குவிப்பாக அந்தத் தொகை கொடுக்கப்பட்டதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அரசாங்க அதிகாரி தம்மை செக்ஸ் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் செய்திருந்ததுடன் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்திருந்தார் என்றும் அந்தச் செய்தி தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து அந்த அரசாங்க அதிகாரி உதவியாளருடைய உதவியை நாடியதாகவும் அவர் பின்னர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மாதுவுடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

மாவட்ட அதிகாரி கைது செய்யப்பட்டாரா ?

அந்த மாது எம்ஏசிசி-யிடம் புகார் செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து செபெராங் ஜெயாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தி ஸ்டார் தெரிவித்தது.

சந்திப்பின் போது உதவியாளரும் மேலும் இருவரும் மாதுவிடம் பணத்தை கொடுத்த பின்னர் நீதிமன்ற வழக்கை கைவிடுவதற்கு ஒப்புக் கொள்ளும் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் எம்ஏசிசி அதிகாரிகள் நுழைந்து மூவரையும் இரவு 11.30 வாக்கில் கைது செய்ததாக தி ஸ்டார் கூறியது.

அந்த உதவியாளர் பெர்மாத்தாங் பாவ் பிகேஆர் தொகுதி குழு உறுப்பினர் என்றும் அந்த பெர்மாத்தாங் தொகுதியில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு உதவி வருகிறார் என்றும் அந்த ஏடு கூறிக் கொண்டது.

TAGS: