அம்னோ தகவல் தலைவர்: நஜிப் 2008 சுனாமியை நிறுத்தி விட்டார்

maslanமலேசியர்களுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசாங்கம் செயல்படுத்தியதும் 2008 ‘அரசியல் சுனாமி’ முடிவுக்கு வந்து விட்டது.  இவ்வாறு  அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார்.

பிரதமர் அமலாக்கிய 10 அம்சங்கள் அடிப்படையில் அந்த  ‘அரசியல் சுனாமி’ அஸ்தமனமாகி விட்டதாக அவர் மேலும் சொன்னார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றியது, உருமாற்றங்கள், அனைவருக்கும் நீதி, வளர்ச்சி அடைந்த உயர்ந்த ஆற்றலைக் கொண்ட நாடாக மலேசியாவை மேம்படுத்தியது, மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தது, உலக அரங்கில் தலை சிறந்து நிற்பது ஆகியவை அவற்றுள் அடங்கும்.

“டத்தோ ஸ்ரீ நஜிப் உண்மையில் ‘அரசியல் சுனாமி’-யை நிறுத்தி விட்டார்.  நாம் 2008ல் ‘அரசியல் சுனாமி’ குறித்து அதிகம் கவலை கொண்டிருந்தோம். ஆனால் 2013ல் அது முடிவுக்கு வந்து விட்டது என நான் நம்புகிறேன்,” என அகமட் நேற்று தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட்-டில் ‘மக்களுடன் ஒரு காலைப் பொழுது’ என்னும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போது கூறினார்.

பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நஜிப் நிகழ்த்தியுள்ள சாதனைகள் ‘மிகச் சிறந்தவை’ என வருணித்த அகமட்,  வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு புதிய வேகத்தையும் நம்பிக்கையையும் அவர் அளித்துள்ளதாகச் சொன்னார்.

அந்த வகையில்  தெலுக் இந்தான் உட்பட 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் என்று அகமட் எண்ணுகிறார். பிரதமருடைய சீர்திருத்தங்கள் மீது பல்வேறு இன மக்களும் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

“அந்த நம்பிக்கை வெறும் கூற்றின் அடிப்படையில் அமைந்தது அல்ல. மாறாக களத்தில் இறங்குவதால் கிடைத்தது. நான் பல ஆண்டுகளாக களத்தில் இறங்கி வேலை செய்கிறேன்.”

“மக்கள் எங்கள் திட்டங்களில் கலந்து கொள்கின்றனர். எங்கள் விளக்கங்களுக்குச் செவி சாய்க்கின்றனர்.  ‘அரசியல் சுனாமி’ நிறுத்தப்பட்டு விட்டதையே அவை அனைத்தும் காட்டுகின்றன,” என அவர் மேலும் சொன்னார்.

பெர்னாமா

TAGS: