அன்வார்: டாக்டர் மகாதீர் என்னால் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்

anwarபிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பதே முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்போது  காணுகின்ற ‘ மிகப் பெரிய பயங்கரக் கனவு’ என அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

பெட்ரோலிய நிறுவனங்களுடன் தமது புதல்வர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்பதே மகாதீருடைய முக்கியமான கவலை என அன்வார் நேற்று கூச்சிங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“நான் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்வதே அவரது பயங்கரக் கனவாகும். அவர் தமது பரம்பரை பற்றியும் தமது புதல்வருடைய எண்ணெய் அடிப்படை நிறுவனம் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்.”

“நாம் எண்ணெய் உரிமப் பணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெட்ரோலிய உற்பத்தியில் 30 விழுக்காடு கட்டுப்பாட்டைப் பெற்றுள்ள சொந்த பெட்ரோலிய நிறுவனங்களை சபாவும் சரவாக்கும் அமைத்துக் கொள்வது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவை ஆளுவதற்கு பக்காத்தானுக்கு ஒரு தவணைக் காலம் கூடக் கொடுக்கப்படக் கூடாது என மகாதீர் அடிக்கடி சொல்லி வருவது பற்றி அவர் கருத்துரைத்தார்.

‘எண்ணெயும் பீரும் (beer)’

பெட்ரோனாஸிடமிருந்து பல குத்தகைகளைப் பெற்றுள்ள ஒரு நிறுவனம் மகாதீருடைய புதல்வர்களில் ஒருவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறிக் கொண்டார்.

“அதனால் அவர் மிகவும் கவலைப்படுகின்றார். ஏனெனில் பல பில்லியன் ரிங்கிட் அதில் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் அவர் பெட்ரோனாஸுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார். நாம் அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஆலோசகராக இருக்க முடியாது. அவரது  புதல்வருக்கு கொடுக்கப்படும் குத்தகைகளில் ஏகபோக ஆதிக்கமும் இருக்காது.”

anwar1“மணிலாவைத் தளமாக கொண்ட பீர் தயாரிப்பு நிறுவனமான San Miguel-லை 2.9 பில்லியன் ரிங்கிட்டுக்கு   கொள்முதல் செய்த தமது இன்னொரு புதல்வர் பற்றியும் மகாதீர் கவலைப்படுகிறார். அவ்வளவு பணத்தை நீங்கள் எப்படி திரட்ட முடிந்தது என நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

“முஸ்லிம் தலைவர் ஒருவர் நீங்கள் எப்படி  San Miguel-லை உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் ?” என அன்வார் வினவினார்.

பக்காத்தான் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் போது கடந்த காலத்தில் மகாதீர் செய்தவற்றுக்காக அவரை தொந்தரவு செய்யாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

“யார் மீதும் எனக்குப் பகை உணர்வு இல்லை என நான் மகாதீருக்கும் மலேசியர்களுக்கும் உறுதி கூற விரும்புகிறேன். யாரையும் பழி வாங்குவது என் நோக்கமல்ல. இந்த நாட்டை நேர்மையாகவும் நியாயமாகவும் ஆளப்படுவதை உறுதி செய்வதில் மட்டுமே நான் அக்கறை கொண்டுள்ளேன்.”

‘அளவுக்கு அதிகமான பகை உணர்வு’

மகாதீர் கௌரவமாக ஒய்வு பெற வேண்டும் என யோசனை கூறிய அவர், “மகாதீர் தனிநபர்கள் மீதுஅதிகமான வெறுப்புணர்வையும் பகைமையையும் காட்டக் கூடாது,” என்றார்.

“அவர் நன்றாக இருக்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அதே வேளையில் நான் பிரதமரானால் நாட்டை சீனர்களிடம் விற்று விடுவேன் எனக் குற்றம் சாட்டுவது போன்ற விஷயங்களில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுரை கூறுகிறேன்.”

“அவ்வாறு சொல்வது விவேகமானது அல்ல,” எனக் குறிப்பிட்ட அன்வார் மகாதீர் எண்ணங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை என்றார்.

“மகாதீர் பழைய சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறார். அவரது சில கருத்துக்கள் உண்மையில் காலத்திற்கு ஏற்றவை அல்ல,” என அன்வார் சொன்னார்.