தேர்தல் கண்காணிப்பில் சிவில் சமூகத்தையும் இணைப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மேலும் ஒரு தோல்வி கிடைத்துள்ளது.
13வது பொதுத் தேர்தலில் பார்வையாளராக பங்காற்றுவதற்கு இசி விடுத்த அழைப்பை TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் அதிகாரத்துவப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
தேர்தல் பார்வையாளருக்கு இசி அனுமதித்துள்ள பணிகள் தொடர்பில் அந்த அழைப்பை நிராகரிப்பதாக அது விடுத்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பார்வையாளர்களுக்கான நிபந்தனைகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்கனவே குறை கூறியுள்ளது. மனித உரிமை மேம்பாட்டுக் கழகமும் தேசிய ஜனநாயக, தேர்தல் நேர்மைக் கழகமும் ஏற்கனவே இசி அழைப்பை ஏற்க மறுத்து விட்டன.
இசி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்ற முடிவைத் தெரிவிக்கும் கடிதம் ஜனவரி 4ம் தேதி இசி-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக TI-M தலைமைச் செயலாளர் ஜோஷி எம் பெர்ணாண்டெஸ் கூறினார்.
தேர்தல் பார்வையாளர்களை அங்கீகரிக்கும் நடைமுறைகளும் அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்களுக்கு விதிக்கப்படும் எல்லா விதிமுறைகளும் அனைத்துலகத் தரத்துக்கும் வழக்கங்களுக்கும் ஏற்ப உறுதி செய்யுமாறும் TI-M, இசி-யைக் கேட்டுக் கொள்வதாகவும் ஜோஷி சொன்னார்.
“உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்களுக்கு இசி நிர்ணயித்துள்ள சில பணிகள் மீது TI-M , சந்திப்புக்களின் போது ஐயம்தெரிவித்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என்றாலும் அந்த ஐயங்கள் பற்றி அவர் விவரிக்கவில்லை. இசி-யுடன் நடத்தப்படும் விவாதங்கள் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ரகசியத்தன்மையைப் பாதுகாக்க TI-M ஒப்புக் கொண்டுள்ளது.”