“பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது,” என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தெரிவித்து உள்ளார்.
சிரியா அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், 22 மாதங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களை, சிரிய இராணுவம் ஒடுக்கி வருகிறது. அதிபர் ஆசாத், பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது. பல நகரங்களை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள் இராணுவ தளங்களை தகர்த்து வருகின்றனர். இந்த சண்டையில், 60 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
ஓயாத சண்டை காரணமாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா., மற்றும் அரபு நாடுகளின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரபு நாடுகளின் சார்பில் சிரியாவுக்கான அமைதி தூதராக நியமிக்கப்பட்டுள்ள லக்தர் பிரஹிமி, சமீபத்தில், அதிபர் ஆசாத்தை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, ஆசாத், டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு அரங்கில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: நான் பதவி விலக வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை ஏற்க முடியாது. சிரியாவுக்கு துரோகம் இழைக்க நினைக்காதவர்களுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளேன். வெளிநாடுகளின் தூண்டுதலால், சிரியா தற்போது, போர்களமாக உள்ளது. ஒருவரையொருவரை கொல்லும் நிலை உள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமும், நிதியும் வழங்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். எல்லையோரப் பகுதிகள், அரசு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.
அரசியல் ரீதியான தீர்வுக்கு நாங்கள் தயங்கவில்லை. நாங்கள் யாருடன் பேச்சு நடத்துவது. எதிர்தரப்பினருக்குத் தெரிந்ததெல்லாம் பயங்கரவாத மொழி தான். அவர்களுடன் நாங்கள் எப்படி பேசுவது. மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்த முடியாது. அறிவு பூர்வமானவர்களுடன் தான் பேச முடியும். இவ்வாறு, ஆசாத் பேசினார்.