பெர்சே பற்றிய கருத்துக்காக பிஎஸ்சி தலைவர் கண்டிக்கப்பட்டார்

நாடாளுமன்ற தேர்தல் சிறப்புக்குழுவிடம் (பிஎஸ்சி) பரிந்துரைகள் வழங்க தடைசெய்யப்பட்டுள்ள பெர்சே 2.0 வரவேற்கப்படவில்லை என்று தன்னிச்சையாக அறிவித்த பிஎஸ்சின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கீலி பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சினத்திற்கு ஆளாகியுள்ளார்.

முடிவுகளை அவரே தானாக எடுப்பதாக இருந்தால், எல்லாவற்றையும் ஓங்கீலியே செய்யலாமே என்று அவரை பக்கத்தான் பிஎஸ்சி உறுப்பினர்கள் டாக்டர் ஹத்தா (பாஸ்), அந்தோனி லோக் (டிஎபி) ஆகியோர் சாடினர்.

“ஒங்கீலி அமைச்சராக இருந்தபோதிலும், இந்தக் குழுவில் அவர் எங்களைப் போன்ற ஒருவர்தான்”, என்று கூறிய ஹத்தா, அந்த அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பு குழுவின் ஒட்டுமொத்த ஒன்பது உறுப்பினர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

ஜூலை 9 பேரணிக்கு முன்பதாக பெர்சே சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டதால், அதன் உறுப்பினர்கள் அக்கூட்டணியின் பிரதிநிதிகள் என்றில்லாமல் தனிப்பட்டவர்கள் என்ற முறையில் விவாதத்தில் பங்கேற்கலாம் என்று கூறியிருந்தார்.

“பெர்சே பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பல்ல. அவர்கள் தனிப்பட்டவர்கள் என்ற முறையில் வரவேண்டும்…நிச்சயமாக (பெர்சே 2.0 தலைவர் எஸ்.அம்பிகா) மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் உறுப்பினர் என்றோ அல்லது டத்தோ அம்பிகா (தனிப்பட்ட முறையில்) என்றோ வரலாம்”, என்றார் ஓங்கீலி.

பிஎஸ்சி கடந்த திங்கள்கிழமை அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டம் அக்டோபர் 12 இல் நடைபெறவிருக்கிறது.

“இவ்விவகாரத்தில் பெர்சே ஒரு பங்காளர் என்பதை அவர் நிராகரித்தார்…அது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. ஆனால், அந்த முடிவை அவர் மட்டுமே எடுத்துள்ளார். முதல் கூட்டம்கூட இன்னும் நடத்தப்படவில்லை. அக்கூட்டத்தில்தான் தேவையான விதிமுறைகள் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.

“அவர் அமைச்சராக இருக்கலாம், ஆனால் பிஎஸ்சியின் தலைவர் என்ற முறையில் அவரது தகுதி எங்களுடையது போன்ற ஒரே மாதிரியானதாகும். எங்களுடன் கலந்தாலோசிக்காமல் அந்த முடிவை எடுப்பதற்கு இந்த ஓங்கீலி யார்?”, என்று வினவினார் ஹத்தா.

ஓங்கீலி அவ்வாறு எடுத்த முடிவு ஓர் அமைச்சரின் தகுதிக்கு ஏற்றதல்ல என்று ஹத்தா மேலும் கூறினார்.

கடந்த மாதம் பிரதமர் நஜிப் பிஎஸ்சி அமைக்கப்படுவது பற்றி அறிவித்தபோது ஓங்கீலி அமைச்சராகவும் பிஎஸ்சியின் தலைவராகவும் இருப்பது பொதுமக்கள் அமைப்புகள் தெரிவித்த வருத்தமான கருத்துகளில் மிக முக்கியமானதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

“நாங்கள் ஆமாம்சாமிகள் அல்ல”

ஆறு பொது சந்திப்புகள் நடைபெறும் என்பதும் ஓங்கீலி தனிப்பட்ட முறையில் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எடுத்த இன்னொரு முடிவாகும் என்று அந்தோனி லோக் கூறினார்.

“நாம் முடிவுகளை ஒன்றாக ஒரு கூட்டத்தில் எடுக்க வேண்டும். அவர் அவ்வாறான முடிவுகளை தானாகவே எடுக்க முடியாது”, என்று கூறிய லோக், குழுவின் வேலை தவறான முறையில் தொடங்கியுள்ளது.

“இது ஓர் இருகட்சிகள் சார்ந்த குழு என்பதை ஓங்கீலிக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்ளும் ஆமாம்சாமி குழுவல்ல. ஒவ்வொரு முடிவும் உடன்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்”, என்று லோக் கூறினார்.

TAGS: