எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் செய்தி திரட்டுவதற்கு ஊடகச் செய்தியாளர்களுக்கு போலீசார் வழங்க விருக்கும் அடையாள அட்டைக்கு மலேசியாகினி அதன் செய்தியாளர்களின் பெயர்களை கொடுக்கப்போவதில்லை.
மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் அமைதியான பேரணி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான போலீசாரின் பணிக்கு அது உதவாது என்றார்.
“போலீசார் பாதுகாப்பை அனைவருக்கும் அளிக்க வேண்டும். அவ்வளவுதான்”, என்றாரவர்.
நேற்று, பேரணியின்போது செய்தி சேகரிக்க விருக்கும் ஊடகச் செய்தியாளர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அந்த அடையாள அட்டை அவர்களின் “பாதுக்காப்பு”க்கு என்று அவர்கள் கூறினர்.
மலேசியாகினிக்கு அதன் சொந்த அடையாள அட்டைகள் இருப்பதோடு தகவல் மற்றும் கலாச்சார அமைச்சு வழங்கியள்ள அடையாள அட்டைகள் இருக்கின்றன. செய்தியாளர்களை அடையாளம் காண்பதற்கு அவை போதுமானது என்று ஃபதி மேலும் கூறினார்.
ஊடகப் பணியாளர்களுக்கு போலீசார் வழங்கும் எந்த ஓர் அடையாள அட்டையும் மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை இழக்கச் செய்யும் என்றாரவர்.