கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணமாற்று வணிகர் ஒருவரிடமிருந்து 900,000 ரிங்கிட் பெறும் அந்நிய நாணய நோட்டுக்களைத் திருடியதாக கூறப்படும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூன்று அதிகாரிகள் மீது இன்று குற்றம் சாட்டப்படும்.
பண்டார் சாலாக் திங்கியில் உள்ள சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அவர்கள் இன்று கொண்டு செல்லப்பட்டு முதுநிலை அரசு வழக்குரைஞர் ஒருவரால் குற்றம் சுமத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் கொள்ளையடித்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவர் என்பதை இன்று காலை சில வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
உதவி சூப்பரிடெண்ட் தகுதியுள்ள 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மூன்று அதிகாரிகளுக்கும் போலீஸ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எம்ஏசிசி அந்த மூவரையும் இடைநீக்கம் செய்துள்ளது.
அந்த மூவரும் செப்டம்பர் 15ம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் துணைக் கட்டிடத்துக்குள் பண மாற்று வணிகரிடம் திருடியதாகக் கூறப்பட்டது.
அந்த வழக்கை சிலாங்கூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்துக்குப் பதில் புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகமே சிறப்பாக கவனிப்பதாகத் தெரிகிறது.