நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் மனித உரிமைக்கழகம் ஆதரிப்பதோடு போலீஸ் எப்படி நடந்துக் கொள்கிறது என்பதையும் கண்காணிக்கும் என்கிறார் அதன் தலைவர் கா. ஆறுமுகம். பேரணியின் இடமாற்றம் குறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்தபோது, “போலீஸ் உறுதியளித்தது போல் நடந்து கொண்டால் பிரச்னை எதுவும் எழ வாய்ப்பில்லை” என்றார்.
மெர்டேக்கா அரங்கத்தைப் பயன்படுத்தலாம் என ஒப்புதல் கொடுத்த போலீஸ், நேற்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் பத்து லட்சம் பேர் கலந்துக் கொள்வர் என இலக்கு வைத்திருப்பதால் அந்த எண்ணிக்கையிலான மக்களை மெர்டேக்கா அரங்கம் சமாளிக்க முடியாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே தெரிவித்தார்.
“மக்கள் பேரணி என்பது சனநாயத்தின் முக்கிய ஆணிவேர், அதை அகற்றினால் சர்வதிகாரம்தான் தலை தூக்கும்” என்று கூறிய வழக்கறிஞருமான ஆறுமுகம், “இது நமது அரசமைப்பில் உள்ளது என்றும் அரசமைப்பு விதி 10(1)(ஆ) பிரிவின் படி, “குடிமக்கள் அனைவரும் அமைதியாக ஆயுதங்களின்றி கூட்டம் கூடுவதற்கு உரிமையுடையவர்கள் என கூறுகிறது” என்கிறார்.
மக்களால் தேர்வு செய்யப்படும் அரசாங்கம் தனது அதிகாரத்தைக் கொண்டு சட்டங்களை உருவாக்கி மக்களைக் கட்டுப்படுத்தி அதன் வழி தங்களின் அதிகாரத்தை மேலும் வலுவாக்கி கொள்வதுதான் வரலாறாக இருந்தது. அந்தப் போக்கைக் கட்டுப்படுத்தத்தான் இது போன்ற அரசமைப்பு உரிமைகள் உண்டாக்கப்பட்டன. “இதையும் நாம் பணயம் வைத்தால் நாம் நல்ல குடிமக்கள் என்ற தகுதியை இழக்கிறோம்” என எச்சரிக்கிறார் ஆறுமுகம்.
தூயத் தேர்தல் பேரணி பெர்சே 3.0 கடந்த ஆண்டு ஏப்ரல் 28-இல் நடந்த போது 572 நபர்கள் கைது செய்யப்பட்டனர்; பத்திரிகை நிருபர்கள் உட்பட பலர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர்; மொத்தம் 909 கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் மீது அரசாங்கம் வழக்கும் தொடுத்தது. ஆனால் தற்போது நடந்துவரும் சுஹாகாம் விசாரணையில் போலீஸ் தனது அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.
இப்படியாக கடந்த பேரணியைப் பற்றி விவரித்த ஆறுமுகம், அரசாங்கம் மக்களின் பிரதிநிதி; மக்களின் குரலை அவர்கள் கேட்க வேண்டும்; அதிகார திமிரால் கேட்க மறுப்பதும், அதிகாரத்தைக் கொண்டு சுயநலத்துடன் நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதும் மக்களைத் தெருப்பேரணிக்கு இட்டு செல்கிறது. அதில் மக்கள் பங்கெடுக்கும் போதுதான் அவர்கள் சனநாயக உரிமையை உணர்வதாக பொருள்படும் என்கிறார்.
அப்படிப்பட்ட சூழலில் “கொள்கையற்ற தெருப்போராட்டங்கள் மக்களின் ஆதரவை பெறாது” எனக் கூறிய அவர் “பெர்காசா போன்ற அமைப்புகள் பலமுறை முயன்றும் அவர்களால் மக்களைத் திரட்ட இயலவில்லை” என சுட்டிக் காட்டினார்.