பொதுத் தேர்தல் வரப்போவதால், இன்று பின்னேரத்தில் 2012 க்கான வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) பிரதமர் நஜிப் நாட்டின் 1.2 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பார் என்று ஊகிக்கப்படுகிறது.
ஆனால், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு ஆற்றலுடையதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அரசாங்கப் பொருளாதார ஆலோசகர்.
“அரசாங்கத்துறையில் இல்லாதவர்களின் நிலை என்னவாகும்? தனியார்துறையில் சம்பளப் பிரச்னை இன்னும் கடுமையானதாக இருக்கிறது”, என்று தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் (என்இஎசி) உறுப்பினரான மஹானி ஸைனால் அபிடின் இன்று காலை பிஎப்எம் ரேடியோ நிகழ்ச்சியின் கூறினார்.
மலேசியாவை எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளைக் கையாள்வதற்கு அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்வு மிகச் சிறந்த தீர்வு என்பதில் அவர் மனநிறைவு கொள்ளவில்லை.
பொருளாதாரக் கொள்கைகள் மீது ஆலோசனை வழங்குவதற்காக அரசாங்கம் உருவாக்கிய அமைப்பு என்இஎசி ஆகும். மஹானி இஸ்இஸ் என்ற வியூக மற்றும் அனைத்துலக ஆய்வுகள் கழகத்தின் தலைமை அதிகாரியுமாவார்.
இந்த ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னொருவர் சுயேட்சை சிந்தனை மன்றமான சமூக முன்னேற்ற ஆய்வு என்ற அமைப்பின் செயல்முறை நிருவாகியான தே சி சாங். இவர் டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் எங் குவானின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்.
அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்ற ஊகத்தின் மீது கருத்துரைக்குமாறு மஹானியும் தேயும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் சம்பள உயர்வால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை அரசாங்கம் உணர்ந்துள்ளதா என்று அவர் வினவினார். பிற்காலத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் ஓய்வு ஊதியம் பெருமளவானதாக இருக்கும் என்றாரவர்.
“இதுதான் நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி”, என்றார் தே.
நாட்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடாக இருக்கும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமா என்று அவ்விருவரிடமும் வினவப்பட்டது.
இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் அரசாங்கம் “துரிதமாகவும் கடுமையாகவும்” செயல்படும் என்று தாம் நம்புவதாகக் கூறிய மஹானி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும்போது “அரசு ஊழியர்” யார் என்பது பற்றி தெளிவான விளக்கம் தேவை என்றாரவர்.
ஆசிரியர்களும் போலீஸ்காரர்களும் அரசாங்க ஊழியர்களாக கருதப்படுகிறார்கள். கல்வி போதனையின் தரம் உயர கூடுதல் ஆசிரியர்களும் குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளும், குற்றச்செயல்களுக்கு எதிரான போரில் அதிகமான போலீஸ்காரர்களும் வேண்டும் என மக்கள் கோருகின்றனர். இது நிச்சயமாக அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று மஹானி விளக்கமளித்தார்.
“அரசாங்க நிருவாகத்தில் மட்டும் ஈடுபட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்”, என்றாரவர்.
அரசாங்க ஊழியர்களைக் கவர போட்டி
நாட்டின் 1.2 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் மிக முக்கியமான வாக்கு வங்கிகளாக இருப்பதால், அரசியல் ஆட்டத்தின் இருதரப்பினரும் அவர்களைக் கவருவதற்காக கூடுதல் பண நன்மைகளை வழங்க முன்வந்துள்ளன என்பதை தே ஒப்புக்கொண்டார்.
பக்கத்தானின் நிழல் பட்ஜெட்டிலும் அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பைச் சீரமைக்க ரிம5.9 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்வழி குறைந்தபட்ச சம்பளம் ரிம1,100 ஆக இருக்கும்.
பக்கத்தான் நிழல் பட்ஜெட்டில் முதியோர்களுக்கும் குடும்பமாதுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நேரடி நிதி உதவி அந்த உதவித் தொகையை விரிவுபடுத்தும் என்று குறைகூறினார் மஹாணி.
“ஒரு முறை நேரடி நிதி கொடுத்து விட்டால் அதைத் திரும்பப் பெறுவது மிகக் கடினமாகும்…அவர்களைக் குறைந்த வருமானம் பெறும் கூட்டத்திலிருந்து வெளிக்கொணர்வதற்கான திட்டம் இருக்க வேண்டும். சில குடும்பமாதுகளுக்கு குறிப்பிடத்தக்க சொத்துகள் இருக்கலாம். அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படாது”, என்றார் மஹாணி.
இதற்குப் பதில் அளித்த தே, பின் அரசாங்கம் முன்னதாக நிர்ணையித்த உதவித் தொகை அளவை நிலைநிறுத்துவதுதான் பக்கத்தானின் நோக்கம் என்றார். பக்கத்தானின் நிழல் பட்ஜெட் வரையப்படுவதில் தேயின் ஆலோசனையும் பெறப்பட்டது. இத்துடன், வீணடிப்பு, ஊழல் போன்றவற்றை அகற்றுவது மற்றும் மலேசியர்களின் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று தே விளக்கம் அளித்தார்.