ஜனநாயகத் தேர்தல்களுக்குப் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நடைமுறைக்கு இணங்க அதிகாரத்தை அமைதியாக ஒப்படைப்பது மலேசியாவில் வழக்கமான ஒன்று என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார்.
“நாம் சுதந்திரம் பெற்றது முதல் 12 பொதுத் தேர்தல்களை நடத்தியுள்ளோம். நமது அரசமைப்பு நிர்ணயம் செய்துள்ள வழிகளுக்கு ஏற்ப அவை நடத்தப்பட்டுள்ளன.”
“தேர்தல் முடிவுகளுக்கு இணங்க அதிகார மாற்றம் அமைதியாக நடத்தப்பட்டுள்ளது. அது தான் நமது பாரம்பரியம்,” என கோலாலம்பூரில் சட்ட மாநாடு ஒன்றைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் நஜிப் தெரிவித்தார்.
அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் என்ன வேண்டுமானாலும் செய்யும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள வேளையில் அவரது அறிக்கை வெளியாகியுள்ளது.
இவ்வாண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் அது அதிகாரத்தை அமைதியாக ஒப்படைக்கும் என நஜிப் உத்தரவாதம் தர வேண்டும் என மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதியான லிம் கிட் சியாங் அண்மையில் கோரியிருந்தார்.