சுவாராம்: ஜுலை 9 “போலீஸ் முரட்டுத்தனத்துக்கு” மன்னிப்புக் கேட்க வேண்டும்

ஜுலை 9ம் தேதி அமைதியான பெர்சே 2.0 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 262 கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, போலீசார் முரட்டுத்தனத்துக்கு தக்க சான்று என சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு கூறுகிறது. அதனால் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

பலத்தைப் பயன்படுத்தியதற்காக உள்துறை அமைச்சரும் போலீஸ் படைத் தலைவரும் “வருந்துவதாக” கூற வேண்டும். அந்த பேரணியின் போது மரணமடைந்த ஆர்ப்பாட்டக்காரர் பஹாருதீன் அகமட்டுக்கு இழப்பீடும் கொடுக்க வேண்டும் என சுவாராம் இன்று விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.

“அமைதியான பெர்சே 2.0 ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு 226 கண்ணீர் புகைக் குப்பிகளும் 36 கண்ணீர் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்…அது வரிப்பணம் விரயமாக்கப்பட்டதற்கு ஒப்பாகும்.”

ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த முரட்டுத்தனத்துக்கு உள்துறை அமைச்சும், தேசியப் போலீஸ் படைத் தலைவரும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் சுவாராம் கருதுகிறது”, என்று அதன் ஒர் ஒருங்கிணைப்பாளரான யாப் ஹெங் லுங் கூறினார்.

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகமான முரட்டுத்தனத்தைக் காட்டியதாக கூறப்படும் போலீஸ் அதிகாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தவறு செய்த அந்த அதிகாரி மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

பேரணியின் போது அந்த அதிகாரி தனது முகத்தைக் கைக்குட்டையால் மூடியிருந்தார். ஆனால் சாட்சிகள் இல்லாததால் அவர் மீது எந்த வழக்கும் தொடரப்பட மாட்டாது.

என்றாலும் தவறு செய்த அந்த அதிகாரி மீது கூட்டத்தைக் கலைக்கும் போது சீரான செயல் நடைமுறைகளை மீறியதற்காக உள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

துங் ஷின் மருத்துவமனை வளாகத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் போது சீரான செயல் நடைமுறைகளை மீறிய  போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு திங்கட்கிழமை அறிவித்தது.