நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பயத்தை தகர்த்து, அவர்களின் கோரிக்கையை முன்வைத்து மெர்டேகா அரங்கத்திற்கு ஊர்வலம் சென்ற அந்தக் காட்சி ஒரு புதிய விடியலை கோரும் மக்கள் அலை என்பதனை உணர்த்தியதுள்ளதாக கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்-கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டியதுப் போல், இது மலேசிய மக்களுக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகத்தான் அன்றைய வரலாற்று நாள் காட்சியளித்தது. 12.01.2013அன்று அந்த வரலாற்று இடத்திற்கு ஊர்வலமாய் சென்ற மலேசிய மக்கள், மலேசிய குடிமகனின் அமைதியாக ஒன்று கூடும், பேசும் மற்றும் கோரிக்கையிடும் உரிமையை காப்பாற்றிக் கொண்டனர்.
நாட்டில் அமைதி பேரணிக்கும் போராட்டத்திற்கும் உண்மையான அர்த்தங்களை மாற்றி ஆட்சிப் புரிந்துக் கொண்டிருக்கிறது நஜிப் தலைமையிலான மத்திய அரசாங்கம். இந்த மக்கள் எழுச்சி பேரணி நடைபெறுவதற்கு முன் மறைமுகமான எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்கள் பல இருந்த போதிலும், ஒத்துழைப்பு கொடுத்து சில போலிஸ் அதிகாரிகள் புன்முகத்துடன் பணியாற்றியது பாராட்டத்தக்கது என சார்ல்ஸ் கூறினார்.
எனினும், போலிஸ் துறையின் ஆக்கரமான மாற்றத்தோடு இப்பேரணி முடிந்து விடவில்லை. அலை அலையாய் ஒன்று திரண்ட மக்கள், பத்து கோரிக்கைகளை மிக தெள்ளத் தெளிவாகக் கோரியிருக்கின்றனர். இப்போது அரசாங்கம் செயல்பட வேண்டும். ஆனால் அது சாத்தியமா என வினவிய சார்ல்ஸ் உண்மையிலே ஒரு மகா பேரணி பொதுதேர்தலுக்கு முன் காத்துக் கொண்டிருப்பதாகவும் அது ஒரு வரலாற்றுச் சரித்தரத்தை உருவாக்கும் அளவிற்கு உள்ளதாகவும் கூறினார்.
மக்களுக்கு முன் உரிமை என வெட்டு முழக்கம் போடும் பிரதமர் நஜிப் பல பிரச்னைகளால் நிலை தடுமாறி இருப்பது அவர் பொதுத் தேர்தலின் நாளை ஒத்தி வைத்துக் கொண்டே இருப்பதிலிருந்து தெரிகின்றது. இனியும் ஏன் தாமதம். மலேசிய மக்கள் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதும் அதனை தட்டிப் பறித்தால் என்ன நேரிடும் என்பதனையும் இந்த மக்கள் எழுச்சி பேரணி தெளிவாக விளக்கி விட்டது. மக்களுக்கு வேண்டியது “மாற்றம்” ஒன்றே. நமது தலையெழுத்து மாறவும், உரிமைகள் காக்கப் படவும் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார் சார்ல்ஸ் சந்தியாகோ.