2012 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சங்கள்:

மொத்த வரவு செலவு -232.8 பில்லியன் ரிங்கிட், கூடுதல் 9.4%.

நடைமுறைச் செலவுகள்- 181.6 பில்லியன் ரிங்கிட் கூடுதல் 11.5%.
 
மேம்பாட்டுச் செலவுகள்- 51.2 பில்லியன் ரிங்கிட் கூடுதல் 4.1%.

கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு ஆசியாவில் வலுவானதாகும். இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் 21.2 பில்லியன் ரிங்கிட்டை அந்நிய நேரடி முதலீடு எட்டியது.

அரசாங்கம் இவ்வாண்டு 5 விழுக்காட்டுக்கும் 5.5 விழுக்காட்டுக்கும் இடையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

உலக பொருளாதார மந்த நிலை எதிர்பார்க்கப்பட்டாலும் 2012ல் வளர்ச்சி 5 முதல் 6 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் வரவு செலவுப் பற்றாக்குறை 2012ல் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.7 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும்.

2011ல் அது 5.4 விழுக்காடாக இருந்தது. 2009ல் 7.4 விழுக்காடாக இருந்த வரவு செலவுப் பற்றாக்குறை 2010ல் 5.6 விழுக்காடாக குறைக்கப்பட்டது.

2008ல் 12.8 பில்லியன் ரிங்கிட் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. 2012ல் அது 60 விழுக்காடு அதிகரித்து 20.5 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்.

அடிப்படை வசதிகள் தொழிலியல், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கு 29.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

கல்வி, பயிற்சி, வீடமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட சமூகத் துறைக்கு 13.6 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சேவைத் துறையில் உள்ள மேலும் 17 துணைத் தொழில்களை அரசாங்கம் தாராளமயமாக்கும். அதில் 100  விழுக்காடு அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படும்.

பிபிபி உதவி நிதிக்கு கொடுக்கப்படும் 20 பில்லியன் ரிங்கிட்டில் 18 பில்லியன் ரிங்கிட், உயர்ந்த தாக்கத்தைக் கொண்ட திட்டங்களுக்கும் இரண்டு பில்லியன் ரிங்கிட் பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கும் பயன்படுத்தப்படும்.

கோலாலம்பூர் அனைத்துலக நிதி மாவட்டம்:

-10 ஆண்டுகளுக்கு 100 விழுக்காடு வருமான வரி நிவாரணம், முத்திரை வரி விலக்கு.

-மேம்பாட்டு அலவன்ஸ்கள் மூலதன அலவன்ஸ்கள்.

-அந்த மாவட்டத்தில் சொத்துக்களை மேம்படுத்துகின்றவர்களுக்கு 50 விழுக்காடு வருமான வரி நிவாரணம்.

2012ல் ஐந்து வட்டார பெருவழித் திட்டங்களின் வளர்ச்சிக்கு மொத்தம் 978 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள் வருமாறு:

1 ஜோகூர்பாரு-நூசா ஜெயா நெடுஞ்சாலை
2 தைப்பிங் பாரம்பரிய சுற்றுலாத் திட்டம்
3 பெசுட் விவசாய பெருந்திட்டம்
4 லாஹாட் டத்து செம்பனை எண்ணெய் கூட்டுத் திட்டம்
5 சாமாலாஜுவில் நீரளிப்புத் திட்டம்

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு: 2012ம் ஆண்டு மத்தியில் பெல்டா குளோபல் வென்சர் ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் புர்சா மலேசியா பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அந்த நிறுவனம் உலகளவிய நிறுவனமாக மாறுவதற்கு நிதி திரட்டப்படும்.

பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு பெரிய தொகை ஒன்று வழங்கப்படும்.

சிறிய நடுத்தரத் தொழில்கள் புத்துயிர் பெறுவதற்கு 100 மில்லியன் ரிங்கிட்.

இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்படும் சிறிய நடுத்தரத் தொழில்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் பெறும் அவசர நிதி அமைக்கப்படும்.

லங்காவி வளர்ச்சிக்கு 410 மில்லியன் ரிங்கிட். தொல்பொருள் கூடம், போக்குவரத்து வசதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அந்த தொகை பயன்படுத்தப்படும்.

சொத்து ஆதாய வரி:

இரண்டு ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால் -10 விழுக்காடு.
2 முதல் 5 ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால் -5 விழுக்காடு.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் விற்கப்பட்டால் – 0 விழுக்காடு.

வரலாற்றில் முதன் முறையாக 2012ம் ஆண்டு தொடக்கம் அனைத்து தொடக்க இடைநிலைப் பள்ளிக் கட்டணங்களும் ரத்துச் செய்யப்படும். அதனால் அரசுக்கு இழப்பு 150 மில்லியன் ரிங்கிட்.

கல்விக்கு: மொத்த ஒதுக்கீடு- 50.2 பில்லியன் ரிங்கிட்.

– மிஷன், தாய்மொழிப் பள்ளிகள் உட்பட எல்லாப் பள்ளிகளுக்கும் 1.9 பில்லியன் ரிங்கிட்.

-பள்ளிக்கூடக் கட்டிடங்களை மேம்படுத்துவதற்கு 1 பில்லியன் ரிங்கிட் (இதில் 500 மில்லியன் ரிங்கிட் தேசிய தொடக்கப்பள்ளிகளுக்கும் தேசிய வகை சீனத் தொடக்கப்பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் தேசிய வகை தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் மிஷன் பள்ளிகளுக்கு 10 மில்லியன் ரிங்கிட்டும் உதவி பெறும் சமயப் பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் மாரா இடைநிலைப் பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்படும்)

-தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 70 விழுக்காடு வருமான வரிக் கழிவு.

-மிஷன் பள்ளிகளுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வரி நிவாரணம்.

கிராம மேம்பாடு: கிராமப்புற மின் விநியோகத் திட்டங்களுக்காக குறிப்பாக சபா, சரவாக்கிற்கு 1.1 பில்லியன் ரிங்கிட்.

சபாவில் கிராமப்புற சமூகத்துக்கு தூய்மையான நீரை வழங்குவதற்கு 50 மில்லியன் ரிங்கிட்.

(இன்னும் வளரும்)