அன்வாரும் கைரியும் அவதூறு வழக்கைத் தீர்த்துக் கொண்டனர்

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்காருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இரு தரப்பும் அந்த வழக்கைத் தீர்த்துக் கொள்வதற்கு இணக்கம் கண்டதே அதற்குக் காரணமாகும்.

அந்த இணக்கத் தீர்வை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று பதிவு செய்தது.

அந்தத் தீர்வின் கீழ் கைரி தமது முந்திய நிலையை மாற்றிக் கொண்டு அன்வார் தேசத் துரோகி என்றும் அமெரிக்காவுக்கும் யூதர்களுக்கும் கைப்பாவை  என்றும் தாம் சொல்லவில்லல எனக் கூறியுள்ளார்.

காயப்படுத்துகின்ற அந்த சொற்களைத் தாம் சொல்லவில்லை என பிரதிவாதி இப்போது கூறுவதால் விவகாரம் அத்துடன் முடிவுக்கு வந்து தீர்க்கப்படுகிறது என அன்வாருடைய வழக்குரைஞரான கோபிந்த் சிங் டியோ நீதிமன்றத்தில் கூறினார்.

அந்தத் தீர்வை உறுதிப்படுத்துமாறு நீதிபதி சூ ஜியோக் இயாம் அன்வாரையும் கைரியையும் கேட்டுக் கொண்டார். அதற்கு இருவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

“அந்த வழக்குக்கு ‘விரைவான தீர்வு’ கண்ட இரு தரப்புக்களுக்கும் நீதிபதி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் இணக்கத் தீர்வையும் பதிவு செய்தார்.

“இது நீதிமன்ற் நேரத்தை மிச்சப்படுத்தி மற்ற வழக்குகளுக்கு ஒதுக்க வழி ஏற்படும்,” என்றார் அவர்.