‘வாக்குகளுக்காக குடியுரிமை’ – இசி விளக்க வேண்டும் என்கிறார் அம்பிகா

ampigaசபாவில்  ‘வாக்குகளுக்காக குடியுரிமை’ கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்பு சாட்சியமளித்தவர்கள் உறுதிப்படுத்தியதை இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அந்த ஆர்சிஐ விசாரணை தொடரும் விஷயமாகும். எல்லா ஆதாரங்களும் சமர்பிக்கப்படும் வரையில் ஒருவர் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இசி உடனடியாக பொது மக்களுக்கு அல்லது ஆர்சிஐ-யில் அது பற்றி விளக்க வேண்டும். ஏனெனில் அது இசி-யின் நேர்மைக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவாலாகும்,” என அவர் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்கள் “அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டன” என வருணித்த அம்பிகா, இசி பதில் அளிக்காவிட்டால் தேர்தல் நடைமுறைகள் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதோடு தேர்தலை நடத்துவதற்கு இசி-க்கு உள்ள ஆற்றல் மீதும் சந்தேகம் ஏற்படும் என்றார்.

வாக்காளர் பட்டியலை இசி தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர், சபாவில் நிகழ்ந்தது மலேசியாவில் மற்ற இடங்களிலும் நடந்திருக்கக் கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.

ambigaசபாவில் பிஎன் -னுக்கு ஆதரவான மாநில அரசாங்கத்தை தோற்றுவிக்கும் பொருட்டு 1990களில் நடைபெற்ற தேர்தல்களில் குடியேற்றக்காரர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்குமாறு தங்களுக்கு ஆணையிடப்பட்டதாக நேற்று அந்த ஆர்சிஐ-யில் சாட்சியமளித்த பல முன்னாள் தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியேற்றக்காரர்களுக்கு வாக்காளர் அடையாளக் கார்டுகளை வழங்குவது, தகுதி பெறாத குடியேற்றக்காரர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளை வழங்குவது ஆகியவை உட்பட பல நடவடிக்கைகள் அவற்றுள் அடங்கும்.

இதனிடையே அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கும் முன்னர் ஆர்சிஐ-யிடம் என்ன கூறப்பட்டது என்பது மீது தமது அதிகாரிகளிடமிருந்து கூடுதல் தகவல்களை நாடப் போவதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

TAGS: