கடந்த மாதம் Universiti Utara Malaysia (UUM)-ல் டிசம்பர் எட்டாம் தேதி நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் கே.எஸ் பவானி என்ற இந்திய மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் – னின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
அந்தக் கருத்தரங்கில் ஷாரிபா சட்டக் கல்வி மாணவியான பவானியிடம் நடந்துகொண்ட விதம் நாகரீகமற்றது. ஒரு கருந்தரங்கு பேச்சாளர் என்ற முறையில் ஷாரிபா ஜொஹ்ரா ஆக்ககரமாகவும் திறனுடனும் செயல்படுவதில் தோல்வியுற்றுள்ளார். மாறாக மற்ற மாணவர்களின் முன்னிலையில் பவானியை முழுமையாக பேச விடாமலும் தொடர்ந்து தேவையில்லாமல் திட்டும் 24 நிமிட காணொளி மனித உரிமைகளில் ஒன்றான பேசும் உரிமையை பவானியிடம் ஷரிபா தட்டிப் பறிப்பதை தெளிவாகக் காட்டுகிறது.
தமக்கு பேசும் உரிமையிருப்பதாக சொல்லி தேவையில்லா பேச்சுக்களை பேசும் ஷரிபா, மாணவி பவானிக்கும் திரு.பீட்டருக்கும் பேசும் உரிமை இருப்பதை மறந்து விட்டார். அவர்களை பேச விடாமல் தடுக்கும் அவரது செயல் மிக மூர்க்கத்தனமாக காட்சியளிக்கின்றது.
பவானி கேட்ட கேள்வியோ, அல்லது பேசும் முறையிலும் எந்த ஒரு தவறும் இல்லை என அவரது துணிச்சலை பாராட்டிய சார்ல்ஸ், அவர் கேட்ட இலவச கல்வித் திட்டம் சாத்தியமான ஒன்றே எனவும் இதை மலேசிய அரசாங்கம் பரீசலிக்க வேண்டிய கேள்வியே. இலவச கல்வி மாணவர்களின் உரிமை. அதை அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்து அரசாங்கம் இலவச கல்வி கொடுக்க வேண்டும் என மரியாதையுடனும் திறமையுடனும் விவாதித்த பவானியின் வாதம் பாராட்டுக்குரியது.
அக்கரத்தரங்கில் பெர்சே பேரணிகளும் பிற அமைதி பேரணிகளும் தீயவை என்று சித்தரிக்கும் வீடியோ பட காட்சிகளும் அம்பிகாவையும் பக்காத்தான் தலைவர்களையும் கேவலமாகவும் அக்கூட்டத்தில் திரையிடப்பட்டதாகவும் ஓர் அறிக்கையில் பவானி கூறியிருந்தார். ‘பல்கலைக்கழக மாணவர்களும் அரசியலும்’ என்ற தலைப்பைக் கொண்ட அக்கருத்தரங்கம் முழுக்க முழுக்க மூளையைச் சலவை செய்யும் நிகழ்வாக இருக்கின்றது.
இம்மாதிரியான மாணவர்கள் விமர்சிக்க அனுமதிக்காத கருத்தரங்கங்களை பல்கலைகழகங்களில் நடத்தப்படுவதை மேல் கல்வி அமைச்சு நிறுத்த வேண்டும். மேலும் சட்டக் கல்வி மாணவியான பவானியிடம் மரியாதையின்றி செயல் பட்ட ஷரிபா பவானியிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சார்ல்ஸ் வலியுறுத்தினார்.