கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை பிரதமர் சொல்ல வேண்டும் என அவர் கோரினார்.
“உங்கள் பதில் தான் நம்ப முடியாமல் இருக்கிறது. அந்த கொலை வழக்கு சம்பந்தமாக நான் அம்பலப்படுத்திய விவரங்கள் உண்மையானவை,” என தீபக் இன்று காலை அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் ‘அமர்ந்து கொண்டிருக்கும் பிரதமர்’ என்னும் முறையில் அந்த மலேசிய மக்களுக்கு அந்த இரண்டாவது சத்தியப் பிரமாணம் பற்றிய உண்மையை விளக்க வேண்டும். ‘அசையாத வாத்து போல’ பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கக் கூடாது.”
பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுக்களை அந்தக் கம்பள வியாபாரி கூறியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு வல்லமையுடைய அந்தத் தம்பதிகள் பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
“நீங்கள் இப்போது அமர்ந்து கொண்டிருக்கிற நாட்டில் மிக உயரிய பிரதமர் பொறுப்பின் நம்பகத்தன்மைக்காக அந்த சட்டவிரோத இரண்டாவது சத்தியப் பிரமாணம் பற்றியும் அதற்குத் திட்டமிடுவதில் உங்கள் மனைவி பற்றியும் உங்களுடைய சட்டவிரோத ஈடுபாடு பற்றியும் உண்மையைப் பேச வேண்டும். ‘கருத்துச் சொல்வதற்கு இல்லை’ எனக் கூறி அடுத்த இரண்டு மாதங்கள் கடப்பதற்கு காத்திருக்கக் கூடாது.”
பாலசுப்ரமணியத்தின் சத்தியப் பிரமாணத்தை மூடி மறைக்கும் நடவடிக்கையில் நஜிப்பும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தீபக் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் மீதான நீண்ட அமைதியை நஜிப் நேற்று கலைத்தார்.
தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை மீட்டுக் கொள்ளுமாறு பாலசுப்ரமணியத்தை வற்புறுத்துமாறு நஜிப்பும் ரோஸ்மாவும் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தீபக் கூறிக் கொண்டுள்ளார்.
“அது உண்மையல்ல. அவர் நம்பக் கூடிய மனிதர் அல்ல,” என நஜிப் நேற்றிரவு கோலாலம்பூரில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.