சாபாவில் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்த முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை இழுத்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை “பழிப்பாவத்துக்கு அஞ்சாத வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர்” என பிகேஆர் வருணித்துள்ளது.
“அரச விசாரணை ஆணையம் ஆராய்ந்து வரும் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஐசி(அடையாள அட்டை) திட்டத்தில் தம்மைக் குற்றமற்றவராகக் காண்பித்துக்கொள்ள துன் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் அறிக்கை, அவர் திமிர் பிடித்தவர், திருந்தாதவர், பழிப்பாவத்துக்கு அஞ்சாமல் வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர் என்பதை நிறுவுகிறது.
“அந்தச் சேற்றுக்குள் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானையும் இழுத்து வந்திருப்பது வெறுக்கத்தக்க, கோழைத்தனமான செயலாகும்.
“தாம் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐசி மோசடித் திட்டம் துங்குவின் காலத்தில் தீபகற்ப மலேசியாவில் குடியுரிமை வழங்கப்பட்டது போன்றதுதான் என்று அவர் கூறுவது மக்களின் காதில் பூ சுற்றும் முயற்சியாகும்”, என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, சாபா ஆர்சிஐ விசாரணையில் கூறப்பட்ட சாட்சியங்கள் பற்றிக் கருத்துரைத்த மகாதிர், தாம் பிரதமராக இருந்தபோது பிலிப்பினோக்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். அது முறைப்படித்தான் செய்யப்பட்டது என்றாரவர்.
ஆனால், வாக்குகளுக்காக-குடியுரிமை என்று கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி அவர் கருத்துரைக்கவில்லை. அதற்குப் பதிலாக எல்லாம் முறைப்படிதான் செய்யப்பட்டது என்றும் துங்கு அவரது காலத்தில் தீவகற்ப மலேசியாவில் தகுதியற்ற ஒரு மில்லியன் பேருக்கு (மலாய்க்காரர்-அல்லாதார்) குடியுரிமை வழங்கியதைவிட இது ஒன்றும் மோசமானதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாபா ஆர்சிஐ விசாரணையில், சாபாவில் பிஎன் அதிகாரத்தை வலுப்படுத்தவும் அம்னோ அங்கே வலுவாகக் காலூன்றவும் சட்டவிரோத குடியேற்றக்கார்களுக்கு அடையாள அட்டைகளும் மற்ற ஆவணங்களும் வழங்கப்பட்டதாக சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர்.
கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கும் மகாதிர்
அஸ்மின், மலேசியர்கள் கெட்டிக்காரர்கள் என்றார். அவர்களால் “கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கும் சுதந்திரம் பெற்ற நேரத்தில் கூட்டாக செய்யப்பட்ட முடிவின் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைக்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியும்”, என்றார்.
“எதுவாக இருந்தாலும், துங்குவின் செயல் பற்றி இங்கு விசாரிக்கப்பட வில்லை. புரொஜெக்ட் ஐசி பற்றித்தான் விசாரிக்கப்படுகிறது. அதனால் டாக்டர் மகாதிர் நம் கவனத்தைத் திசைதிருப்பும் செயலை நிறுத்த வேண்டும்”, என்று கோம்பாக் எம்பியுமான அஸ்மின் கூறினார்.
ஆர்சிஐ-இடம் சாட்சியம் அளித்தவர்கள், மகாதிரின் அரசியல் செயலாளர் அசீஸ் ஷம்சுடின் வீட்டில் தங்கி இருந்து அதை “போலி அடையாள அட்டைகள் வெளியிடும் நடவடிக்கை மையமாக” பயன்படுத்தி வந்ததாகக் கூறி இருப்பதை அஸ்மின் நினைவுபடுத்தினார்.
“மெகாட் ஜூனிட்(அப்போதைய உள்துறை துணை அமைச்சர்) அடையாள அட்டைகளுக்கான ரசீதுகளை வழங்குமாறு என்ஆர்டி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்ற தகவலும் அதிர்ச்சி அளிக்கிறது.
“அசீஸ் ஷம்சுடினும் மெகாட் ஜூனிட்டும் தாங்கள் யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ-அவர் வேறு யாருமல்ல, மகாதிர்தான்- அவரின் அனுமதியின்றி தாங்களே அவ்வளவு பெரிய மோசடியைச் செய்திருக்க முடியாது”, என அஸ்மின் கூறினார்.
மகாதிரின் எதிர்வினை “கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி” என க் குறிப்பிட்ட பிகேஆர் துணைத் தலைவர் “நம் இறையாண்மையை விற்ற தேச துரோகதுக்காக” முன்னாள் பிரதமரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.