‘பொதுத் தேர்தலுக்குமுன் ஆவி வாக்காளர்களைத் துடைத்தொழியுங்கள்’

1rciசாபாவில் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகக் கூறப்படுவதை விசாரித்துவரும் அரச ஆணையத்திடம் (ஆர்சிஐ) வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தகவல்கள் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் வாக்காளர் பட்டியலைத் துப்புரவுபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர் சைமன் சிப்பான்

எனவே, வாக்காளர் பட்டியலை விரைவாக சுத்தப்படுத்தும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் அல்லது அது செய்யப்படும்வரை பொதுத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்.

“போதுமான நேரம் இல்லை. என்றாலும் வாக்காளர் பட்டியலிலிருந்து ஆவி வாக்காளர்களை அப்புறப்படுத்தும் முயற்சிகளையாவது செய்யலாம்”, என்றாரவர். சைமன் முன்பு சாபா மாநிலச் செயலாளராக பணிபுரிந்துள்ளார்.

1rci simonஆர்சிஐ-இடம் சாட்சியமளித்த முன்னாள் சாபா தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) அதிகாரிகள் இருவர், 1990-களில் குடியேற்றக்காரர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்குத் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்குமாறு தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறினர்.

அந்நடவடிக்கையில் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜூனிட் மெகாட் ஆயுப்புக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அரசியல் செயலாளர் அப்துல் அசீஸ் ஷம்சுடினுக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், வியாழக்கிழமை சாட்சியமளித்த சாபா என்ஆர்டி தலைவர் அப்துல் ரவுப் சானி,, தாம் சொந்தமாக மேற்கொண்ட நடவடிக்கை அது என்றும் அதற்கும் அப்துல் அசீஸுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினார்.

நேற்று, ஆர்சிஐ-இடம் சாட்சியமளித்த இந்தியர் ஒருவரும் பாகிஸ்தானியர் ஒருவரும் சாபாவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தங்களுக்குக் குடியுரிமை கிடைத்ததாகக் கூறினர்.

ஆர்சிஐ நடத்தும் விசாரணை குறித்து மனநிறைவு தெரிவித்த சைமன், விசாரணையில் சாட்சிகள் தெரிவித்த தகவல்கள் எல்லாம் சாபா மக்கள் நீண்ட காலமாகவே அறிந்தவைதாம் என்றார்.

மலேசியக் குடியுரிமை கொடுக்கப்படுவது பற்றி சைமன் கேள்வி எழுப்பவில்லை.ஆனால், குடியேற்றக்காரர்களுக்கு ஐயத்துக்கிடமான முறையில் குடியுரிமை வாரி வழங்கப்பட்டது சாபாவில் பொருளாதார, சமூக, அரசியல் பிரச்னைகளை உருவாக்கியுள்ளது என்றார்.

TAGS: