2012 ஆம் ஆண்டிலிருந்து நாட்டிலுள்ள அரசாங்க தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார்.
மலேசிய குழந்தைகளின் சமூக-பொருளாதார சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தரமான மற்றும் பெற்றிருக்க வேண்டிய கல்வியை வழங்குவது இதன் நோக்கமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
“தற்போது, தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இன்னும் முறையே ரிம24.50 மற்றும் ரிம33.50 கட்ட வேண்டியுள்ளது. இக்கட்டணங்கள் 2012 ஆண்டிலிருந்து அகற்றப்படும்”, என்று நாடாளுமன்றத்தில் தமது பட்ஜெட் உரையின் போது பிரதமர் கூறினார்.
“இந்த அறிவிப்புடன், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
கட்டணம் அகற்றப்படுவதில் ரிம150 மில்லியன் நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கான 2012 ஆண்டு நிதி ஒதுக்கீடு ரிம50.2 பில்லியன் என்று அவர் அறிவித்தார்.
கல்வி அமைச்சுக்கான மேம்பாட்டு ஒதுக்கீடு நிதியான ரிம1.9 பில்லியன் அனைத்து வகையான தேசியப்பள்ளிகள், தேசிய-மாதிரி சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள், மிஷன் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெறும் சமயப்பள்ளிகள் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கூடுதலாக, கட்டடம் கட்டுதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றுக்காக ஒரு புதிய சிறப்பு நிதியின் மூலம் ரிம1 பில்லியன் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தொகையில், தேசிய மாதிரி சீனப்பள்ளிகள், தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளிகள், மிஷன் பள்ளிகள், அரசாங்க உதவி பெறும் சமயப்பள்ளிகள் மற்றும் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ரிம100 மில்லியன் வழங்கப்படும். எஞ்சியுள்ள ரிம500 மில்லியன் தேசியப்பள்ளிகளுக்காகும் என்றாரவர்.
கல்வி அமைச்சில் பதிவு செய்துகொண்டுள்ள, வரையறுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஊக்குவிப்பு வழங்கப்படும் என்றார். அவை எதிர்காலச் சந்ததியினருக்கு சிறப்பான கல்வி வழங்குவதில் முக்கியமான பங்கை ஆற்றுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.