பாஹாசா மலேசியா பைபிள் பதிப்புக்களுக்கு எரியூட்டுமாறு பெர்க்காசா முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அறைகூவல் தொடர்பில் பல தரப்புக்கள் ஆத்திரமடைந்துள்ளன. அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.
பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள அந்த அறைகூவல் மீது நஜிப் இனிமேலும் மௌனமாக இருக்கக் கூடாது என்று பூச்சோங் எம்பி-யும் டிஏபி தலைவருமான கோபிந்த் சிங் டியோ சொன்னார்.
அந்த அறைகூவல் ‘கிரிமினல் தன்மையைக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் கிறிஸ்துவர்களை ‘மறக்கவில்லை’ எனக் கடந்த மாதம் மலேசியக் கிறிஸ்துவர்களிடம் தாம் சொன்னதை நஜிப் உண்மையென நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்,
“கிறிஸ்துவர்களுக்கும் எல்லா மலேசியர்களுக்கும் எதிராக தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் மோசமான தவறுகளைச் சரி செய்வதற்கு நஜிப் மலேசியப் பிரதமர் என்ற முறையிலும் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் என்ற முறையிலும் தமது அதிகார வலிமை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.”
“இந்த சூழ்நிலைகளில் பிரதமர் மௌனமாக இருப்பது அவர் வலியுறுத்தி வருகின்ற ஒரே மலேசியா கோட்பாட்டைச் சிதறடிக்கிறது. அந்தக் கோட்பாடு அரசியல் நோக்கம் கொண்டது, வெறுமையானது என அவரது எதிர்ப்பாளர்கள் சொல்வதை அது நிரூபிகிறது,” என கோபிந்த் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அவரது கருத்தை சரவாக் மாற்றத்திற்கான இயக்கமும் (MoCS) பகிர்ந்து கொண்டுள்ளது. கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் சொற்களை தொடர்ந்து சொல்வதற்கு பாசிர் மாஸ் எம்பி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
“நியாய சிந்தனை கொண்ட அரசாங்கத் தலைவர்கள் எப்படி இப்ராஹிம் அலியையும் அவரது பெர்க்காசா அமைப்பையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்கின்றனர்,” என அதன் தலைவர் பிரான்சிஸ் பால் ஷா வினவினார்.
“அது குறித்து ஏதும் செய்யாத பிரதமர் மீது நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நஜிப் சபா, சரவாக்கிற்கும் பிரதமரா அல்லது மலாயாவுக்கு மட்டும் தானா என்று நாங்கள் சில வேளைகளில் சந்தேகப்படுவதும் உண்டு,” என்றார் அவர்.
“அந்த அல்லாஹ் விவகாரம் மீது நிகழும் சர்ச்சையில் சரவாக் மக்களாகிய நாங்கள் கலந்து கொள்ள விரும்பவில்லை. சபா, சரவாக்கில் சமய, இனப் பிரச்னைகள் ஏதுமில்லை. மலாயாவைச் சேர்ந்த இப்ராஹிம் அலி போன்ற ‘ஆபத்தான’ வெறிபிடித்த அரசியல்வாதிகள் பரப்பும் “சமய விஷத்தினால்” மாசுபட நாங்கள் விரும்பவில்லை.”
எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்களைப் பிரதிநிதிக்க வேண்டிய ஒர் எம்பி-யாக இருக்க வேண்டிய இப்ராஹிம் அலியின் அத்தகைய நடவடிக்கைகள் பிஎன் பின்பற்றும் பல இன அணுகுமுறைக்கு உகந்ததாக இல்லை என மசீச மத்தியக் குழு உறுப்பினர் லோ செங் கோக்-கும் கூறியுள்ளார்.
மலேசியாவில் உள்ள முஸ்லிம்களுடைய உணர்வுகளை முஸ்லிம் அல்லாதார் தூண்டி விடுவதைத் தடுப்பதற்கு ‘இறைவன்’ என்ற சொல்லுக்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களை எரிப்பது தான் ஒரே வழி என இப்ராஹிம் கடந்த சனிக் கிழமை கூறியிருந்தார்.