ஆலயமணி ஓசையைக் குறைக்கச் சொல்லும் அறிவிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது

1templeகாஜாங் நகராண்மைக் கழகம், பாங்கி லாமா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் மாலை 6 மணிக்குமேல் மணியோசை அளவைக் குறைக்க வேண்டும் என்று ஜனவரி 8-இல் அனுப்பி வைத்திருந்த அறிவிக்கையை மீட்டுக்கொண்டிருக்கிறது.

நகராண்மைக் கழகத் தலைவரும் ஆலய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசியதை அடுத்து அந்த அறிவிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழக கவுன்சிலர் ஷாபி ங்கா கூறினார்.

அறிவிக்கை இரத்துச் செய்யப்பட்டதுடன் அதை அனுப்பிவைத்த அதிகாரிமீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

“அறிவிக்கை கடந்த வாரம் இரத்தானது. அதை அனுப்பிய அதிகாரிமீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

“ஆனால், அதிகாரி ஒரு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அறிவிக்கை கொடுத்தல் என்ற நடைமுறை விதிகளின்படிதான் நடந்து கொண்டிருக்கிறார்”, என்று கூறிய ஷாபி அவ்வதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

“வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைவான நடவடிக்கை கூடாது என்று அந்த அதிகாரிக்குக் கூறப்பட்டுள்ளது. அது பற்றி முதலில் நகராண்மைக் கழகத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்தான் முடிவு செய்வார்.

“இதன் தொடர்பில் மாநில அரசின் வழிகாட்டி உத்தரவு ஒன்றும் உள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நகராண்மைக் கழக அதிகாரிகளுக்குக் கூறி இருக்கிறோம்”, என ஷாபி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

TAGS: