சபாவில் சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதால் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தேர்தல் நெருங்கி வருவதால் பொது மக்களுக்கு இசி பதில் சொல்ல வேண்டும்,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
ஆர்சிஐ விசாரணைகள் முடியும் வரையில் அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மீது கருத்துரைக்க இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கடந்த வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தார்.
எத்தகைய தாமதமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அம்பிகா எச்சரித்தார். ஏனெனில் ஆர்சிஐ-யில் வெளியிடப்பட்ட தகவல்கள் தீவகற்ப மலேசியா, சரவாக் உட்பட எங்கு வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கக் கூடும் என்றார் அவர்.
பெர்சே இதுகாறும் சொல்லி வந்ததை ஆர்சிஐ கண்டு பிடிப்புக்கள் மெய்ப்பித்துள்ளன. சபாவில் வெகு காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது இப்போது மேற்கு மலேசியாவிலும் நடந்து கொண்டிருக்கிறது,” என்றும் அம்பிகா சொன்னார்.
2012ம் ஆண்டு நான்காவது கால் பகுதிக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அது போன்ற (சட்ட விரோதமான) அறிகுறிகளை மெராப் என்ற மலேசிய வாக்காளட் பட்டியல் ஆய்வுத் திட்டம் கண்டு பிடித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.