ஆர்சிஐ முடியும் வரை காத்திருங்கள் என்கிறார் கைரி

ambigaசபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தையும் சுதந்திரத்துக்கு முன்பு இந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்ட பிரச்னையையும் இப்போதைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கூறுகிறார்.

அதற்குப் பதில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற ஆர்சிஐ விசாரணைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர். ஏனெனில் அது தொடரும் போது சாட்சியமளிக்கின்றவர்கள் அந்தப் பிரச்னை மீது மேலும் முழுமையான விளக்கங்களைத் தரக் கூடும் என கைரி கருதுகிறார்.

“ஆர்சிஐ தனது பணிகளை முடித்துக் கொண்டு அறிக்கை கொடுக்கும் வரையில் அந்த ஆர்சிஐ-க்கும் சுதந்திரத்துக்கு முந்திய குடியுரிமைக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்ப்பது உட்பட ஆர்சிஐ மீதான எந்தக் கருத்துக்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் அந்த அம்னோ இளைஞர் தலைவர் கருதுகிறார்.

மெர்தேக்காவுக்கு முன்பு அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை விசாரிக்க ஒர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்த யோசனை பற்றிக் கருத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது கைரி அவ்வாறு சொன்னார்..

 

TAGS: