பைபிள் எரிப்பு ‘திட்டம்’: பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள்

alkitabபட்டர்வொர்த்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை ‘ பைபிள் எரிப்பு விழா ‘ நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“நாங்கள் அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறோம். நாங்கள் இன்றைய ஆட்சிமன்றக் கூட்டத்தில் அதனை விவாதித்தோம்,” என நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

“நான் அந்த விஷயம் பற்றி பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபிக்குத் தகவல் கொடுத்துள்ளேன். எதுவும் நடந்தால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நான் அவரைக் கேட்டுக்  கொண்டுள்ளேன்.”

பினாங்கு முதலமைச்சர் இன்று அந்த விஷயம் தொடர்பில் ஒர் அறிக்கையை வெளியிடுவார்.alkitab1

பட்டர்வொர்த்தில் உள்ள பாகான் லுவார் நகராட்சி மன்றத் திடலில் அத்தகைய நிகழ்வு ஏதும் நடக்காமல் தடுக்குமாறும் செபெராங் பிராய் நகராட்சி மன்றத்துக்குப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சொன்னார்.

ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த நிகழ்வு குறித்து பட்டர்வொர்த்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு ‘நோட்டீஸ்’ கிடைத்துள்ளதாக மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங் விடுத்த அறிக்கை தொடர்பில் லிம் கருத்துரைத்தார்.

அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு விடுக்கப்படும் அழைப்பும் அந்த நோட்டீஸில் இருப்பதாகவும் இங் தெரிவித்தார்.

போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது

அந்த நோட்டீஸ் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மூன்று மணி வாக்கில் பட்டர்வொர்த் போலீஸ்நிலையத்தில் செயிண்ட் மார்க்ஸ் ஆங்கிலகன் தேவாலயத்தின் ரெவரெண்ட் ஜான் கென்னடி புகார் செய்தார்.

தாம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போலீஸ் நிலையத்தில் இருந்ததாகவும் போலீசார் தங்கள்  விசாரணைக்கு  உதவுவதற்காக அந்த நோட்டீஸை எடுத்துக் கொண்டனர் என்றும் அவர் சொன்னார்.

தமது அஞ்சல் பெட்டியில் ஏ4 வடிவத்தில் இருந்த துண்டுப் பிரசுரத்தில் அந்த நோட்டீஸ் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட கென்னடி தாம் அது பற்றி உடனடியாக இங்-கிற்குத் தகவல் கொடுத்ததாகச் சொன்னார்.

பின்னர் அவர் போலீலிசில் புகார் செய்தார். அந்த விஷயத்தைப் போலீசார் ‘கடுமையாக’ கருதுவதாகவும் கென்னடி சொன்னார்.

அந்த நோட்டீஸில் கையெழுத்து இல்லாததாலும் ஏற்பாட்டாளர்கள் அடையாளம் கூறப்படாததாலும் அது போலியனதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

alkitab2பள்ளி வளாகம் ஒன்றுக்கு வெளியில் முஸ்லிம்களுக்கு பைபிள் பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து மலாய் மொழி பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி முஸ்லிம்களை கேட்டுக் கொண்டார்.

ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு தாம் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது, கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல என இப்ராஹிம் பின்னர் கூறினார்.

மாறாக அது கூட்டரசு அரசமைப்பை மீறுவதற்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படும் பதிலாகும் என அவர் சொன்னார்.

 

TAGS: