சாக்கு போக்கு சொல்வதை நிறுத்தி விட்டு இப்ராஹிம் அலியை விசாரியுங்கள்

charles-santiagoஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது.

இப்ராஹிம் அலியின் அறிவற்ற அறைகூவல் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது மன்னிக்க முடியாத மூர்க்கத்தனமான செயல் என கண்டித்தார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

இப்ராஹிம் அலி இனத்துவேசத்தை தூண்டும் அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சுக்களை பேசுவது முதன் முறையல்ல. அவர் பலமுறை சீனவர்களும் இந்தியர்களும் “வந்தேறிகள்” என கூறியிருக்கின்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில், நாட்டில் பிறந்த குடிமகன்  என்ற முறையில் சம உரிமை கேட்கும் இந்தியர்களையும்  சீனர்களையும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கின்றார்.

இனத்துவேசத்தை தூண்டும் வகையில்  அறைக்கூவல் எழுப்பிய  இப்ராஹிம் அலி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும்  ஒருவேளை அப்பைபல்கள் எரிக்கப்பட்டாலோ அல்லது பெர்கசா தலைவர் மீது போலிஸ் புகார் செய்யப்பட்டால் தான்  நடவடிக்கை எடுக்க முடியும் என வழக்கறிஞர் அப்துல் காணி கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சார்ல்ஸ் சொன்னார்.

அப்துல் காணியின் செயலானது, அரசாங்க அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் சுயேச்சையாக செயல்படாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் நடைமுறையில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதை படம் போட்டுக் காட்டுகின்றது என சாடினார் சார்ல்ஸ். ஆனால் இதை இப்படியே விட்டு விட்டால் நாட்டில் குழப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே, இவ்வாறு இனத்துவேசத்தை தூண்டும் செயல்களை அல்லது பேச்சுக்களை இப்ராகிம் அலி இதோடு நிறுத்துமாறு சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார். மேலும், இவர் மீது தகுந்த விசாரணை நடத்துமாறு அப்துல் காணியை வலியுறுத்தினார் சார்ல்ஸ்.