மாலை 6 மணிக்குமேல் ஆலயமணியின் ஓசையைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி இந்து ஆலயம் ஒன்றுக்கு அறிவிக்கை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம் உள்விசாரணையைத் தொடக்கியுள்ளது.
அவரது நடத்தையில் குறை கூறப்பட்டிருப்பதால் அது பற்றி உள்ளுக்குள் விசாரணை செய்வது நடத்துவது முக்கியமாகும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
“ஊழியர்களின் நலனையும் கவனிக்க வேண்டும். அவர்களை எளிதாக பணிநீக்கம் செய்யவோ இடைநீக்கம் செய்யவோ முடியாது”, என்று வாராந்திர மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
“அதற்கென ஒரு முறை உண்டு. அதன்படி செய்கிறோம்”, என்றார்.
ஆலய மணியோசை தொடர்பில், ஜனவரி 8-இல், பாங்கி லாமா, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்துக்கு அறிவிக்கை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து கருத்துரைத்தபோது காலிட் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.
ஆலயமணி ஓசை குறைக்கப்பட வேண்டும். தவறினால், ஊராட்சி மன்ற சட்டம் பகுதி 82(5)-இன்படி ரிம1,000 அபராதம் அல்லது ஆறுமாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்று அந்த அறிவிக்கை கூறியது. அந்த அறிவிக்கை அதன்பின்னர் இரத்துச் செய்யப்பட்டது.