பிரதமருடைய சிறப்பு அதிகாரி: லிம் குவான் எங் அதிகமாகப் பேசுகிறார்

lim‘பினாங்கு’ மீது கெடாவுக்கு அதிகமான உரிமை இருப்பதாக பிரதமருடைய சிறப்பு அதிகாரி லாட் ஷாரிமான் அப்துல்லா கூறுகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பினாங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ‘அதிகமாகப் பேசுவதாக’ அவர் சொன்னார்.

வரலாற்று அடிப்படையில் பார்த்தால் பினாங்கு கெடாவின் ஒரு பகுதியாகும். அது 1786ம் ஆண்டு ஆண்டு ஒன்றுக்கு 10,000 ரிங்கிட் தொகைக்கு கெடா சுல்தான் பிரிட்டிஷ்காரர்களிடம் குத்தகைக்கு கொடுத்தார். அந்தத் தொகை இன்று வரை கொடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

“அந்தக் குத்தகை ஒப்பந்த ஆவணம் இன்னும் இருக்கிறது. பினாங்கு மீதான கெடாவின் உரிமை இன்னும் செல்லுபடியாகும் என்பதே அதன் அர்த்தம். பினாங்கு மீது கெடாவுக்கு உரிமை உண்டு,” என அவர் நேற்று அலோர் ஸ்டாரில் தாமான் அமான் தேசியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு 100 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

நிகழ்வு ஒன்றில் பினாங்கு என்னும் சொல்லைப் பயன்படுத்தும் போது அதில் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளது என்னும் தோற்றத்தை தருவதை தடுப்பதே தாம் கட்டுப்பாடு விதிப்பதின் நோக்கம் என லிம் சொல்வது மேலோட்டமானது என லாட் ஷாரிமான் குறிப்பிட்டார். அவர் கோலா கெடா அம்னோ தொகுதித் தலைவரும் ஆவார்.

“ஒரே மலேசியா பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. கெடாவில் நிகழும் நிகழ்ச்சி ஒன்றில் ‘பினாங்கு’ என்ற சொல்லை மக்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு ?”

“உண்மையில் ‘பினாங்கு’, ‘புலாவ் பினாங்கு’ போன்ற சொற்களைப் பயன்படுத்தும் உரிமை ஒவ்வொரு மலேசியருக்கும் உண்டு. ஒரே மலேசியா உணவு, ஒரே மலேசியா மக்கள் கடை போன்றது தான் அது,” எனக் குறிப்பிட்ட அவர், லிம் அண்மையில் தெரிவித்துள்ள அந்தக் கருத்து அவருடைய அகங்காரம் கூடியுள்ளதையே காட்டுகின்றது என்றார்.   பெர்னாமா

TAGS: