சாத்தியமான தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய தனது தொடக்க ஆய்வு முடிவுகள் வெளியில் கசிந்ததற்குத் தான் காரணம் எனச் சொல்லப்படுவதை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது.
அந்த ஆய்வில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர் ஆகியோர் தோல்வி கண்டுள்ளதாக பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் நேற்று வெளியிட்ட செய்திக்கு எம்ஏசிசி பதில் அளித்தது.
அந்த வேட்பாளர்கள் எந்தக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படா விட்டாலும் அவர்கள் பிஎன் -னைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் பக்காத்தான் தனது வேட்பாளர் பட்டியலை எம்ஏசிசி -யிடம் வழங்க மறுத்து விட்டது.
“மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் அல்லது கட்சிகளின் மூத்த தலைவர்கள் உட்பட எந்த ஒரு வேட்பாளர் பற்றிய ஆய்வு முடிவும் சோதனை செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்பதை எம்ஏசிசி வலியுறுத்த விரும்புகிறது,” என பெரித்தா ஹரியானில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்த எம்ஏசிசி அந்தச் சோதனைகள் இன்னும் தொடருவதாகக் குறிப்பிட்டது.
தனது ஆய்வு முடிவுகள் சட்ட ரீதியாக கட்டுபடுத்தாது என்றும் தனது முடிவின் அடிப்படையில் வேட்பாளரை முன்மொழிவதா இல்லையா என்பதை முடிவு செய்வது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளைப் பொறுத்தது என்றும் அந்த ஊழல் தடுப்பு அமைப்பு கூறியது.