ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது

Hindraf-Ban liftedநான்கு ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டும், சட்டவிரோத அமைப்பு என்றும் முத்திரை குத்தப்பட்டிருந்த ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் அகற்றியுள்ளது.

இத்தகவல் அந்த அமைப்பிற்கு நேற்றைய தேதியிடப்பட்ட உள்துறை அமைச்சின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

ஆனால், அவர் தற்போது பிரிட்டனில் இருப்பதால் அவரிடமிருந்து மேல்விபரம் எதுவும் பெற முடியவில்லை.

தடை அகற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டவில்லை.

ஹிண்ட்ராப் மீதான தடை அகற்றப்பட்டதைத் தெரிவிக்கும் ஜனவரி 25 ஆம் தேதி இடப்பட்ட அக்கடிதம்Hindraf-Ban lifted1 மன்றங்கள் பதிவு அதிகாரியால் வெளியிடப்பட்டு நெகிரி செம்பிலானிலுள்ள வேதமூர்த்தியின் சட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில், “நீங்கள் செய்திருந்த மேல்முறையீடுகளை மீண்டும் பரிசீலித்த பின்னர் உள்துறை அமைச்சர் மன்றங்கள் சட்டம் 1966, செக்சன் 5 இன் கீழ் அக்டோபர் 14, 2008 இல் ஹிண்ட்ராப் ஒரு சட்டவிரோத அமைப்பு என்று செய்யப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்”, என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு உடனடியான எதிர்வினையாற்றிய ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் என். கணேசன் இன்று பெறப்பட்ட இக்கடிதம் எதிர்பாராதது என்றார்.

“இது தீடீர் சம்பவம், அதுவும் தைப்பூசம் நெருங்கியுள்ள வேளையில். நாங்கள் முதலில் இது குறித்து விவாதிக்க வேண்டும். அதன் பின்னர்தான் முறையான பதில் அளிக்க முடியும்”, என்றாரவர்.

இது நாளை நடைபெறும் தைப்பூச திருநாள் விழாவிற்குப் பின்னர்தான் செய்ய இயலும், ஏனென்றால் ஹிண்ட்ராப் தலைவர்கள் நாடு தழுவிய அளவில் தைப்பூச விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

 

 

 

 

TAGS: