எம்பி பேசுகிறார்- லிம் கிட் சியாங்
நேற்றிரவு டிவிட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தேன்: “தொழிலாளர் கட்சியின் லீ லி லான் சிங்கப்பூர் புங்கோல் ஈஸ்ட் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் 3182 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மக்கள் செயல் கட்சி(பிஏபி) க்கு எதிராக வெற்றிபெற்றுள்ளார். அதனால் நஜிப் 13வது பொதுத் தேர்தலை எண்ணி மேலும் நடுக்கம்.”
மாற்றம் என்னும் காற்று இவ்வட்டாரத்தில் பலமாக வீசத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன் எப்போதையும்விட இப்போது 13வது பொதுத் தேர்தலை எண்ணிக் கலக்கமடைந்துள்ளார். நிலைமை இப்படி இருக்க, அரசுத் துறை ஒன்று தனது அதிகாரத்தையும் அரசுப் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தி நாடு முழுக்க பயணம் செய்து 13வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் ஆற்றல் உண்டு என்ற செய்தியைப் பரப்பி வருவது வேடிக்கையாக உள்ளது.
இத்தகவலைத் தெரிவித்திருப்பது பெர்னாமா. தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் உள்ள சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமைச் செயலாளர், புவாட் ஹசான், கோகூர் பாரு அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜோகூர் சமூக ஊடகப் பங்காளிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “…எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் கடுமையாகப் பாடுபட்டால் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் அதன் இலக்கை அடைய முடியும்”, என்று குறிப்பிட்டார்.
சீனர்களின் குறைந்தது 30விழுக்காட்டு வாக்குகளையும், மலாய்க்காரர்களிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் முறையே 65விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றால் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும் என்றாரவர். ஜோகூரில், பிஎன்னுக்கு மலாய்க்காரர் ஆதரவு 80விழுக்காட்டுக்குமேல் இருப்பதாக புவாட் கூறினார். 2008-க்குப் பிறகு இந்தியர்களின் ஆதரவும் திரும்பி வந்துள்ளது. சீனர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது என்றவர் சொல்லியிருக்கிறார்.
தனிப்பட்ட மலேசியக் குடிமகன் என்ற முறையில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்று நம்புவதற்கும் அதற்காகப் பாடுபடவும் புவாட்டுக்கு உரிமை உண்டு. ஆனால், ஒரு அரசுத் துறையை- ஜாசாவைத்- தன்னுடன் அழைத்துச்சென்று அரசுப்பணத்தில் அம்னோ/பிஎன்னுக்காகப் பரப்புரை செய்யும் உரிமை அவருக்கு இல்லை.
இது அரசுத் துறையும் பொதுப்பணமும் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 55ஆண்டுக்கால அம்னோ/பிஎன் ஆட்சியில் இப்படிப்பட்ட அரசாங்க முறைகேடுகள் வெளிப்படையாகவும் பரவலாகவும் நடந்து வருகின்றன.
அதிகார அத்துமீறல் அளவுகடந்து போய்விட்டது
மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் முதல் தலைமுறை மெர்டேகா தலைவர்கள், அரசாங்கத்தையும் ஆளும் கட்சியையும், தனிப்பட்ட விறுப்புவெறுப்புக்களையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.
அதன் காரணமாகத்தான் மெர்டேகா பெற்ற தொடக்க ஆண்டுகளில் ஊழல், அதிகார அத்துமீறல் ஆகியவை அடக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களில் கேள்வி கேட்பாரின்றி அதிகார அத்துமீறல்கள் பெருகி விட்டன. அரசுப் பணம் அப்பட்டமாக தவறாக பயன்படுத்தப்படுகிறது.
அப்படி எல்லாம் நிகழக்கூடாது என்பதற்காகத்தான் மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் (வலம்), 1959 பொதுத் தேர்தலுக்கு நாடு முழுக்கச் சென்று கூட்டணிக் கட்சிக்கு ஆதரரவாக பரப்புரை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டபோது தம் பிரதமர் பதவியைத் துறந்தார்.
தாம், பிரதமர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தித் தேர்தல் பரப்புரை செய்வதாக யாரும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே தற்காலிகமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 1959-பொதுத் தேர்தலில் கூட்டணி வெற்றிபெற்றதும் மீண்டும் பிரதமராக பொறுப்பெற்றார்.
துங்கு செய்ததுபோல் இன்று யாரேனும் செய்வார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அரசுத்துறைகளும் அமைச்சுகளும் அவற்றின் அதிகாரத்தையும் அரசுப் பணத்தையும் தப்பாகப் பயன்படுத்தி அம்னோ/பிஎன்னுக்கு வாக்குகள் திரட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு நிலையைத்தான் இன்று பார்க்கிறோம்.
ஜாசா தலைமை இயக்குனர் புவாட் ஹசானை அதிகாரத்தை அப்பட்டமாக மீறியதற்காகவும், பொதுப் பணத்தைத் தப்பாகப் பயன்படுத்தியதற்காகவும் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
அல்லது, புவாட் ஹசான் தாமே பதவி விலக வேண்டும். சிறப்புவிவகாரத் துறையும் கலைக்கப்பட வேண்டும். அதன்பின் வேண்டுமானால் புவாட் ஹசான், அம்னோவில் சிறப்பு அதிகாரியாகச் சேர்ந்து அம்னோ/பிஎன்னுக்காக பரப்புரை செய்யலாம்.
===================================================================================================
LIM KIT SIANG– ஈப்போ தீமோர் எம்பி, டிஏபி நாடாளுமன்றத் தலைவர்