சபாவில் கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் வழங்கும் அறிக்கை அல்லது முடிவுகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.
கிரிமினல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுகள் சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
“கிரிமினல் குற்றங்கள் இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இது அரசாங்கத்தின் வாக்குறுதி. ஆர்சிஐ அதற்காகத்தான் அமைக்கப்பட்டது.”
“என்றாலும் கிரிமினல் வழக்குத் தொடுப்பது பற்றிப் பேசும் போது நாம் போதுமான ஆதாரம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஆர்சிஐ-யில் மக்கள் சொல்கின்றவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் ஆதாரங்கள் இல்லை என்றால் நாம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.”
“நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டுமானால் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரத்தைப் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் அல்ல அது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும்.”
அப்துல் கனி, தாவாவ் நீதிமன்றத்தில் இன்று 2013 சட்ட ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
மலேசியத் தேசியத் தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா, முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ் ஷரிப், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமிட் எம்போங், சபா, சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மாலாஞ்சும் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆர்சிஐ மீது நம்பிக்கை வைக்குமாறு அப்துல் கனி எல்லாத் தரப்புக்களையும் கேட்டுக் கொண்டார். அம்பலப்படுத்தப்பட்ட பல விஷயங்களை விவரமாக ஆர்சிஐ ஆராய்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
“அடையாளக் கார்டுகளை வைத்துள்ளவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளது ஒவ்வொருவருக்கும் தெரியும். அரசாங்கம் வெளிபப்டையாக நடந்து கொள்வதை அது காட்டுகின்றது. அதனை வேறு வகையாகப் பார்த்தால் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.”
“ஆர்சிஐ அமைக்கப்படும் என்றும் அது வெளிப்படையாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதி கூறினார். இல்லை என்றால் இவ்வளவு விஷயங்கள் அம்பலமாகி இருக்காது.”
“நான் அது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஏனெனில் நாங்கள் விரும்பியதும் அதுதான். ஏன் உண்மை அப்படியே வெளிவர வேண்டும்,” என்றார் அவர்.
கடந்த காலத்தில் தவறுகள் செய்யப்பட்டிருக்கலாம், அந்த தவறுகள் இப்போது விசாரிக்கப்படுகின்றன, அவற்றை அரசாங்கம் செய்ததா அல்லது அரசாங்க அதிகாரிகள் செய்ததா அல்லது ஊழல் அல்லது மோசடி அம்சம் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தீர்க்கப்பட வேண்டும் என அப்துல் கனி கருதுகிறார்.
“அந்தத் தவறை நாம் சரி செய்ய வேண்டும். அது இந்த மாநிலத்துக்கு மிக முக்கியமானதாகும். இது எனது மாநிலம். நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஆகவே அவசரப்பட வேண்டாம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆர்சிஐ தனது பணி நல்ல முறையில் செய்து முடிக்க அனுமதிப்போம்,” என்றும் அவர் சொன்னார்.
பெர்னாமா