த ஸ்டாரிடம் பேசுவதற்கே அஞ்சுகிறார் முதலமைச்சர்

1starபினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மசீச-வுக்குச் சொந்தமான த ஸ்டார் நாளேட்டிடம் பேசுவதென்றாலே பயப்படுகிறார்.

“நான் சொல்வதைத் திரித்துப் போட்டு விடுகிறார்கள்.அதுதான் த ஸ்டாரிடம் பேசவே பயமாக இருக்கிறது.

“முந்திய நிகழ்வுக்குப் பின்னர், இனி எழுத்துப்பூர்வமாகத்தான் அவர்களுடன் தொடர்புகொள்வோம்-அதில் பிரச்னை வராது. தேர்தல்வரை இந்நிலை தொடரும்”. நேற்று பினாங்கு தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை புரிந்த பின்னர் லிம் செய்தியாளர்களிடம் பேசினார்.

“(பினாங்கு ஓட்டப்போட்டி 2013 பற்றி) நான் சொன்னதைத் திரித்து வெளியிட்டீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது”, என்று அங்கிருந்த ஸ்டார் செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

“வாய்மொழியாக சொன்னால், பிறகு சொன்னதை என்னால் நிரூபிக்க முடியாமல் போகும்; எழுத்தில் இருந்தால் உங்களால் திரித்துக்கூற முடியாது. பினாங்கு ஓட்டப் போட்டி பற்றி நான் சொன்னதைத் திரித்துக் கூறி விட்டீர்கள். அதனால் ஸ்டாருடன் பேசப்போவதில்லை.

“நான் சொன்னதை நீங்கள் வெளியிடவே இல்லை. அவப்பேறாக, த ஸ்டார் பொய்யுரைக்கும் ஏடாகிவிட்டது”, என்றவர் வருத்தப்பட்டார்.

1guanமுன்னதாக லிம், 2013 பினாங்கு ஓட்டம் பற்றித் தாம் கூறியதைத் திரித்து வெளிட்ட த ஸ்டாரின் செயல் “குறும்பத்தனமானது, பொறுப்பற்றது, நேர்மையற்றது” என்று கண்டித்தார்.

லிம், சில இடங்களில் பினாங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவது,  அவற்றுடன் மாநில அரசு சம்பந்தப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்றுதான் சொன்னதாகவும் மற்றபடி ‘பினாங்கு’ என்ற சொல்லுக்கு உரிமை கொண்டாடவில்லை என்றும் மறுத்தார்.

ஆனால், த ஸ்டார், லிம் சொல்லாததைச் சொன்னதாகக் கூறியதுடன் அதைக் கண்டித்து தலைவர்களும் என்ஜிஓ-களும் தெரிவித்த கருத்துகளையும் வெளியிட்டிருந்தது.

லிம், உண்மை விவகாரத்தை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதையும் த ஸ்டார் வெளியிடவில்லை.

லிம்மும் துணை முதலமைச்சர் பி.இராமசாமியைத் தலைவராகக் கொண்ட பினாங்கு இந்து அற வாரியமும் அந்த ஓட்டப் பந்தயத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒதுங்கிக் கொண்டதுடன் கெராக்கான் தலைவர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள ஏற்பாட்டுக் குழு தைப்பூசத்தன்று அதை நடத்துவதையும் கண்டித்தனர்.

ஆக, லிம்முக்கும் டிஏபி-க்கும் ஆகாத அம்னோ-ஆதரவு ஊடகங்களான உத்துசான் மலேசியா, நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், டிவி3 ஆகியவற்றுடன் த ஸ்டாரும் இப்போது சேர்ந்து கொண்டிருக்கிறது.

அவை லிம்மின் செய்தியாளர் கூட்டங்களுக்கு வரலாம். ஆனால், அவை அங்கு இருக்கும்போது லிம் மிகுந்த கவனத்துடன் பேசுவார்.

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக உத்துசான் மலேசியாவுக்கு எதிராக லிம் இரண்டு தடவை வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார். அச்செய்திதாள் பினாங்கு சட்டமன்ற நடப்புகள் பற்றிச் செய்திகள் சேகரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

TAGS: