இசி: தேர்தலுக்குப்பின் ஆர்ப்பாட்டம் கூடாது; மே13 திரும்பவும் வேண்டாம்

1ec1969-இல் நிகழ்ந்த இனக்கலவரம் போன்ற ஒன்று மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க,  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கொண்டாடுவதோ தெருக்களில் ஆர்ப்பாட்டம்  நடத்துவதோ கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளார்.

1ec1இன்று சீனமொழி நாளேடான ஓரியண்டல் டெய்லி-க்கு அளித்த சிறப்பு நேர்காணலில்,  மே 13 துயரச் சம்பவத்திலிருந்து இசி பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது என்று அப்துல் அசீஸ் (வலம்) குறிப்பிட்டார். அதன் விளைவாக தேர்தல் முடிவைக் கொண்டாடவோ  அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவோ அது தடை விதிக்கும்.

“ஒரு தரப்பு தெருவில் இறங்கினால், மற்ற தரப்பும் தெருவில் இறங்கவே செய்யும். நீங்கள் 500,000பேரைத் திரட்டிக்கொண்டு வந்தால் மற்ற தரப்பும் 500,000பேருடன் வரும். பிறகு ஊரடங்கு விதிக்க வேண்டி வரும். அதற்குமுன்பே பலர் காயமடைந்திருப்பார்கள்”, என்றவர் கூறினார்.

எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் எல்லா அரசியல் கட்சிகளும் நிலைத்தன்மையையும் அமைதியையும் நிலைநிறுத்த பாடுபட வேண்டும் என்றவர் அறிவுறுத்தினார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது அண்மையில் எழுந்த சர்ச்சை பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆளும் கட்சியானாலும் மாற்றரசுக் கட்சியானாலும் தேர்தல் நேரத்தில் இன, சமய விவகாரங்களை வைத்து விளையாடக்கூடாது என்றவர் கேட்டுக்கொண்டார்.

“சமயம் மக்களின் இதயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிலர் சமயத்துக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள்”.

தேர்தலில் வென்றவரும் தோற்றவரும் வாக்காளர்களின் தேர்வை மதிக்க வேண்டும். இசி-யைக் குறை சொல்லக்கூடாது.

“2008-இல் ஐந்து மாநிலங்களில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு இசி சுயேச்சையாக செயல்படுவதை நிரூபித்தது. தேர்தல் முடிவுகளுக்காக இசி-யைக் குறை சொல்வது உங்கள் சொந்த பலவீனத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதாகும்”, என்றுரைத்த அப்துல் அசீஸ் தேர்தல் முடிவுகள் இசியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்..

 

TAGS: