தேர்தலுக்கு பின்னர் விலை ஏற்றம் இருக்கும் என பிஎஸ்எம் எச்சரிக்கிறது

2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தைக் கொண்ட தந்திரமான நடவடிக்கை என பிஎஸ் எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி கூறுகிறது.

தேர்தலுக்குப் பின்னர் பாதகமான கொள்கைகளுக்குப் புத்தியிரூட்டப்படும் என அது எச்சரித்தது.

“மக்களுக்குப் போடப்படும் “பிச்சைகள்” குறுகிய காலத்தை அடிப்படையாக கொண்டவை. தேர்தலில் வெற்றி பெறுவதை அவை நோக்கமாக கொண்டுள்ளன.”

“மீண்டும் அதிகாரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டால் உதவித் தொகைகள் மீட்டுக் கொள்ளப்படும். ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரி அமலாக்கப்படும். எரிபொருள் விலைகள் ஏறுவதும் திண்ணம்,” என பிஎஸ்  எம் தேசியப் பொருளாளரான ஏ சிவராஜன் கூறினார்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ரொக்க உதவி, பள்ளிப் பிள்ளைகளுக்கான உதவி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பெல்டா துணை நிறுவனமான Felda Global Ventures Holdings Sdn Bhd-டை பங்கு பட்டியலில் சேர்ப்பது ஆகியவை பிஎன் -னுக்கு ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளன.

குறுகிய கால ரொக்க உதவிகள், மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயருவதைக் கட்டுப்படுத்த தவறி விட்டதைச் சிவராஜன் சுட்டிக் காட்டினார்.

“அரிசி, சீனி, சமையல் எண்ணேய், பெட்ரோல் ஆகியவற்றுக்கு உதவித் தொகைகள் தொடர்ந்து வழங்கப்பட்ட போதிலும் கடந்த ஈராண்டுகளில் அரசாங்கம் உதவித் தொகைகளை மீட்டுக் கொண்டதால் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மக்கள் இன்னும் சிரமப்படுகின்றனர். மக்களுடைய சுமையைக் குறைப்பதற்காக  முன்பு வழங்கப்பட்ட உதவித் தொகை விகிதங்களுக்கு திரும்ப அரசாங்கம் எண்ணவில்லை எனத் தெரிகிறது.

பள்ளிக்கூடக் கட்டணங்கள் நீக்கப்படுவதை வரவேற்ற பிஎஸ் எம், அது எந்த அளவுக்கு பெற்றோர்களுடைய சுமையைக் குறைக்கும் எனத் தனக்குத் தெரியவில்லை  என்று அது கூறியது.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி அமைச்சு ஏழை மாணவர்களுக்கான உணவு, பாடப் புத்தக உதவித் திட்டத்தை குறைத்திருப்பதை இங்கு கவனிப்பது முக்கியமாகும்.”

அந்தத் திட்டத்துக்கான செலவுகளைக் குறைக்கும் பொருட்டு அதற்குத் தகுதி பெறும் மாணவர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதனால் உதவி கிடைக்காத பல குடும்பங்கள் சிரமப்படுகின்றன. 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறது.”