மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்திவந்த பிரெஞ்சுப் படைகள், ஆயுததாரிகளின் முக்கியமான இறுதித் தளமான கிடால் என்ற வடக்கு நகருக்குள் நுழைந்துவிட்டதாக அறிவித்துள்ளன.
விமான நிலையத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி நகருக்குள் நுழைந்ததாகவும், அங்கு வீதிகளில் ரோந்துப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், ஹெலிகொப்டர்கள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருப்பதாகவும் மாலியின் பிராந்திய அரச அதிகாரி ஒருவர் கூறினார்.
அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஆயுததாரிகள் அங்கிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.
கடந்த வாரம் வடக்கு மாலியில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு முக்கியமான இரண்டு நகரங்களை பிரெஞ்சு தலைமையிலான படைகள் சிறிதளவு எதிர்ப்புடன் கைப்பற்றியிருந்தன.
பிரெஞ்சுப் படைகள் விரைவில் அங்கிருந்து வெளியேறிவிடும் என்றும் இனி ஆப்ரிக்க நாடுகள் பொறுப்பை கையேற்கும் என்றும் பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
-BBC