கிறிஸ்துவர்கள் பாரிசானின் ‘பாதுகாப்பான வைப்புத் தொகைகள்’ அல்ல!

christசபா, சரவாக்கில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டினரான கிறிஸ்துவ வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது.

அதனால் தனது ‘பாதுகாப்பான வைப்புத் தொகைகள்’ என பிஎன் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்ளும் அந்த இரு மாநிலங்கள் மீதான பிஎன் பிடிக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளது.

யூகேஎம் என்ற மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் இன வம்சாவளி ஆய்வுக் கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றும் டெனிசன் ஜெயசூரியா அவ்வாறு கணித்துள்ளார்.

அவர் இன்று காலை கோலாலம்பூரில் 15வது மலேசிய வியூக கண்ணோட்டம் மீதான மாநாட்டில் பேசினார்.

பொதுவாக கிறிஸ்துவ வாக்காளர்கள் பழமைப் போக்குடையவர்கள் எனக் குறிப்பிட்ட டெனிசன் கடந்த காலத்தில் நடப்பு அரசாங்கத்தையே அதிகம் நாடி வந்துள்ளனர் எனச் சொன்னார்.

ஆனால் 2008 பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தில் ஏற்பட்டது போன்று ‘கிறிஸ்துவ சமுக எழுச்சியும்’ ஏற்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார்.

அண்மையை காலமாக நிகழ்ந்து வரும் சமய வாக்குவாதங்கள் முஸ்லிம் அல்லாதாருடைய சமயச் சுதந்திரம்,  உரிமைகள் மீதான விஷயங்கள் கிறிஸ்துவ சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் 10 விழுக்காடாக இருந்த போதிலும் சபா, சரவாக்கில் அவர்கள் எண்ணிக்கை கணிசமானது என்பதை டெனிசன் சுட்டிக்காட்டினார்.

“ஆகவே சபா சரவாக் இனிமேலும் பிஎன்-னுக்கு பாதுகாப்பான வைப்புத் தொகைகள் அல்ல,” என அவர் முடித்தார்.

 

TAGS: