சபாவில் 1990களில் தகுதி பெறாத குடியேறிகளுக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கும் திட்டத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தமது உத்தரவு இல்லாதிருந்தும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறிக்கொண்டார்.
“அவர் வழக்கமாக நடவடிக்கை முயற்சியை மேற்கொள்வார்; சில சமயங்களில் (தேவைக்கு மேலும்) அதிகமாகச் செய்வார்”, என்று கோலாலம்பூரில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறினார்.
“என்ன நடக்கிறது என்பது பெரும்பாலும் (மேலிடத்து) உத்தரவுக்கு மாறுபட்டதாகவே இருக்கும்.”
அக்காலகட்டத்தில் அன்வாரும் சபாவில் செயல்பட்ட அமலாக்க அதிகாரிகளும் தங்கள் விருப்பப்படி செயல்பட்டனர். அவர்கள் முறையான உத்தரவு அளிப்பவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி செயல்படவில்லை என்று மகாதீர் மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த மூத்த அரசியல்வாதி கூறினார்.
சபாவில் தகுதி பெறாத குடியேற்றக்காரர்களுக்கு அடையாள அட்டை வழங்குமாறு துணைத் தலைவரான அன்வாருக்கு எப்போதாவது உத்தரவிட்டாரா என்று மகாதீரிடம் வினவப்பட்டது.
“அதில் அவருக்குப் பங்கு இருந்தது” என்று குற்றம்சாட்டிய மகாதீர், நடந்தவற்றில் சட்டவிரோத செயல்களும் நடைமுறை அத்துமீறல்களும் அடங்கும் என்றார்.
நீதிமன்றத்தின் முன் வைப்பத்தற்கான சாட்சியங்கள் தம்மிடம் இல்லாதிருந்தபோதிலும், அன்வார் செய்திருக்கலாம் என்று கருதக்கூடிய தவறுகள் பற்றிய “குறிப்பிட்ட தகவல்” அவரிடம் “இருக்கிறது” என்றாரவர்.
தாம் அழைக்கப்பட்டால் சபா சட்டவிரோத குடியேறிகள் மீதான அரச ஆணைய விசாரணையில் சாட்சியம் அளிப்பேன் என்றார்.
“நான் நடந்தவற்றை கூறுவேன்”, என்று அவர் உறுதியளித்தார்.

























