சிலாங்கூர் மாநில அரசின் மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா

Hostel-Selangorஉலக நாடுகள் எல்லாம் ஏழ்மையில் வாழும் தங்கள் நாட்டு மக்களின் மேம்பாட்டுக்குத்  திட்டம் தீட்டி மக்களின்  வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டுவரும் வேளையில், இந்நாட்டு குடிமக்களின் ஒரு பகுதியினரான  இந்தியர்களை குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று  அவமதிக்கும் கூட்டத்திடம் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சிப் பொறுப்பைக் கடந்த 55 ஆண்டுகளாக ஒப்படைத்து விட்ட நமது ஏமாளித்தனத்தை எண்ணி எந்த இந்தியரும் வேதனைப் படாமல்  இருக்க முடியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறுகிறார்.

நமது முன்னோர்களின் சேவை

இந்த மண்ணுக்காக,  குறிப்பாகத்  தோட்டப் பாட்டாளி மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிய பலர், பொது இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வழி  பல போராட்டங்களில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிற்பதை இந்நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்காவிட்டாலும், நாம் அந்தத் தியாகச் செம்மல்களின் சேவையை நன்றியுடன் நினைவு கூறவே வேண்டும். அவர்களின்  சேவைகள் மற்றும் அவர்களின் தியாகங்கள் மதிக்கப்படாதவையாக இருப்பதை இனியும் நாம் பாராமல் இருக்க முடியாது, கூடாது என்றாரவர்.

தோட்ட மாணவர்கள் தங்கும் விடுதி

இனி நம்மைப் பற்றிய, நம் முன்னோர்கள் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைகள் பற்றியத் தகவல்களை xavier1ஒன்றுதிரட்டும் ஓர் அம்சமாகவும், அவர்களின் சேவைகளை  அங்கீகரிக்கும் ஒரு வரலாற்றுப் பூர்வமான நிகழ்வாகவும் இருக்க வேண்டும் என்பதால் முழுக்க முழுக்கத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தோட்ட மாளிகையில் முன்னாள் சேவையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியும்,  தோட்டப்புற  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிலாங்கூர் மாநில  அரசு அமைக்கவிருக்கும் மற்றொரு வரலாற்று பூர்வமான நிகழ்வான, தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழாவையும் 2-2-2013 இல் காலை 10.00மணிக்கு ஒருசேர நடத்துகிறது மாநில அரசு.

இந்நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.

மக்கள் நலன் போற்றும் பக்காத்தான் அரசின் மற்றுமொரு சமூகத் திட்டமான இதன் அறிமுக விழாவிற்கு அனைவரையும் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்தார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்  ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

TAGS: