சிங்கப்பூர் வாக்களிப்பு விதிமுறைகள் பற்றி இசி சொல்வது தவறு

ECவெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அளவுக்குள் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் (இசி) கூறிக் கொள்வது தவறானது என கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தேர்தல் விதிமுறைகளின் கீழ் “வெளிநாட்டு வாக்காளராக’ ஒருவர் தகுதி பெறுவதற்கு மூன்று ஆண்டுகளில் 30 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும் என அந்தத் தூதரகத்தின் பத்திரிக்கை அதிகாரி பில்பெர்ட் தே விடுத்த அறிக்கை கூறியது.

இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்-உடன் பெர்னாமா நடத்திய பேட்டியை செய்தியாக மலேசியாகினி வெளியிட்டுள்ளது மீது அவர் கருத்துரைத்தார்.

‘வெளிநாட்டு வாக்காளாராக’ தகுதி பெறுவதற்கு ஒருவர், 2011, ஜனவரி முதல் தேதிக்கு முன்னர் மூன்று ஆண்டுகளில் “மொத்தம் 30க்கும் குறையாத நாட்களுக்குத் தங்கியிருக்க வேண்டும் எனச் சிங்கப்பூரின் தேர்தல் துறை தெரிவித்தது.

“நாட்டில் இல்லாத வாக்காளர்கள்”EC1

“நாட்டில் இல்லாத வாக்காளர்கள்” எனத் தகுதி பெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் ஐந்துஆண்டு காலத்தில் குறைந்தது 30 நாட்களாவது மலேசியாவில்  தங்கியிருக்க வேண்டும் என வான் அகமட் அந்தப் பேட்டியில்  கூறியிருந்தார்.

அந்த விதிமுறை நியாயமானது என வருணித்த அவர், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அது பின்பற்றப்படுவதாகவும் குறிப்பாக சிங்கப்பூரில் ‘முன்று மாதங்கள்’ தங்கியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும்  அவர் சொன்னார்.

பெர்சே விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் “நாட்டில் இல்லாத வாக்காளர்கள்” என பதிவு செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு வாக்குகளைச் செலுத்துவதற்கு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 30 நாட்களாவது ஒருவர் தங்கியிருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் முழு நேர மாணவர்களும் அரசாங்க ஊழியர்களும் அவர்களது மனைவிகளும் “நாட்டில் இல்லாத வாக்காளர்கள்” என வகைப்படுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

TAGS: