டிஏபி மனோகரன் இடைநீக்கத்தை தள்ளுபடி செய்தது, குவீ-யின் இடைநீக்கத்தை நிலை நிறுத்தியது

மலேசியக் கொடி மீது கோத்தா அலாம் ஷா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ததை டிஏபி மத்திய செயற்குழு தள்ளுபடி செய்துள்ளது.

அந்தக் கட்சியின் தேசிய தலைமைத்துவம் இன்று வெளியிட்ட அறிக்கை அந்தத் தகவலை தெரிவித்தது.

பேஸ் புக் என்னும் சமூக இணையத் தளத்தில் வெளியிட்ட தமது கருத்துக்களை மனோகரன் உடனடியாக மீட்டுக் கொண்டதுடன் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட கடும் தண்டனையை மாற்றுவது என நேற்றிரவு கூடிய மத்தியச் செயற்குழு முடிவு செய்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு விதித்த இடைநீக்கத்தை எதிர்த்து மனோகரன் முறையீடு செய்து கொண்டார். அந்த முறையீட்டைப் பரிசீலித்த பின்னர் அதனை நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அதே வேளையில் பெந்தாயான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் குவீ தொங் ஹியாங்கிற்கு சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கட்சி நிதிகள் தொடர்பான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட ஆறு மாத இடை நீக்கத்தை டிஏபி மத்திய செயற்குழு உறுதி செய்தது.

இவ்வாண்டு செப்டம்பர் 27 தேதி தொடங்கிய ஆறு மாத இடைநீக்கத்துக்கு எதிராக குவீ செய்து கொண்ட முறையீட்டை அந்தக் குழு நிராகரித்தது.

டிஏபி-யிலிருந்து விலகி சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக மாறுவதற்கு தமக்கு பணம் கொடுக்க சில தரப்புக்கள் முன் வந்ததாக குவீ கடந்த வாரம் கூறிக் கொண்டிருந்தார்.

பெர்னாமா

TAGS: