சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவும் பொருட்டு சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதலாக 120 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.
அவர் இன்று ஒரே மலேசிய மக்கள் உதவி 2.0 திட்டத்தை (BR1M 2.0) கோலாலம்பூருக்கு அருகில் உள்ள அம்பாங்கில் தொடக்கி வைத்துப் பேசினார்.
எதிர்க்கட்சி ஆட்சியின் கீழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு முடிவு கட்டும் பொருட்டு அந்த கூடுதல் ஒதுக்கீடு கொடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
சபாஷ்-க்கு ஏற்கனவே 606 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான நஜிப் சொன்னார்.
“கூட்டரசு அரசாங்கம் அந்த 606 மில்லியன் ரிங்கிட்டை சபாஷ்-க்குக் கொடுத்திருக்கா விட்டால் சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னை இன்னும் கடுமையாகி இருக்கும்.”
“சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. அதனால் 120 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க அது ஒப்புக் கொண்டது.”
தண்ணீர் பிரச்னை விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும்
நஜிப் அம்பாங், பண்டான் நாடாளுமன்றத் தொகுதிகளைச் சார்ந்த 10,000 மக்களிடையே உரையாற்றினார்.
தண்ணீர் பிரச்னைக்கு பிஎன் தொடர்ந்து போராடி வரும் என உறுதி அளித்த அவர், அதற்கான தீர்வு மக்களிடம் இருப்பதாகச் சொன்னார்.
“அந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் நேரம் வரும் போது சிலாங்கூர் மக்கள் முடிவு செய்ய வேண்டும்,” என அவர் நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்தலைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தண்ணீர் பிரச்னையால் 430 வளர்ச்சித் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டு பொருளாதார முதலீடுகள் சரிந்துள்ளதால் அது விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஆகவே சிலாங்கூர் மக்கள் தண்ணீர் பிரச்னையை நன்கு மதிப்பீடு செய்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார் அவர்.
அந்த நிகழ்வின் போது அம்பாங், பண்டான் தொகுதிகளைச் சார்ந்த 10,000 பேருக்கு BR1M 2.0 உதவித் தொகை விநியோகம் செய்யப்படுவதைக் குறிக்கும் வகையில் 30 பேருக்கு அந்த உதவித் தொகையை கொடுத்தார்.
அந்த நிகழ்வில் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார், இரண்டாவது நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா, பண்டான் எம்பி ஒங் தீ கியாட், பிஎன் அம்பாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில் கிஜோ ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
பெர்னாமா