டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமது கட்சி குறித்த நாளுக்குள் அதன் ஆண்டறிக்கையைச் சங்கப்பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ஓஎஸ் கொடுத்துள்ள காலக்கெடு இம்மாத நடுப்பகுதியில் காலவதியாகும்.
டிஏபி, அதன் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை டிசம்பர் நடுவில் நடத்தியது. தேர்தலின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில குளறுபடிகள் நிகழ்ந்து தேர்தல் நடத்தப்பட்ட முறை கூறைகூறலுக்கு இலக்கானது.
அதன்பின் கட்சி அமர்த்திய அனைத்துலக ஆய்வாளர்கள், வாக்களிப்பைத் துல்லியமாக ஆராய்ந்து அதில் எந்த மோசடியும் இல்லை என உத்தரவாதம் அளித்தனர்.
என்றாலும், கட்சியுடன் இணங்கிப்போகாத சிலர், கட்சித் தேர்தல்களை புதிதாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை தேவையற்றது என நிராகரிக்கப்பட்டது.
வழக்கமாக இதுபோன்ற விவகாரங்களில் ஆர்ஓஎஸ் நடுநிலை வகிக்கும். ஆனால், அதற்கு முரணாக ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் அவ்விவகாரம்மீது வெளிப்படையாகக் கருத்துரைத்துரைத்தார்.
இது, சில தரப்புகளில் கவலையை உண்டுபண்ணியது. அது பற்றி நேற்று பாலிக் பூலாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் லிம்மை அணுகி வினவியபோது அவர், அதைப் பற்றிக் கவலை கொண்டவராகத் தெரியவில்லை.
“கவலை வேண்டாம். அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கையைச் சமர்பிப்போம்”, என்றார்.
பாலிக் பூலாவில், பினாங்கு முனிசிபல் மன்றத்தின் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைத்த லிம், அரசாங்கமும் தனியார் துறையும் பொதுமக்களின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து பாடுபட முடியும் என்பதற்கு அம்மையம் ஓர் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.
அங்கு ஐந்து சிறுநீரகச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதும் அவை செயல்படத் தொடங்கும். அவை ஒரு நாளைக்கு 30 நோயாளிகளின் சிறுநீரகங்களைச் சுத்தம் செய்ய முடியும். இதற்கு ஒரு நோயாளியிடம் ரிம30 ரிங்கிட் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதே வேளை அவர்களின் சிகிச்சைக்காக கூட்டரசு அரசாங்கம் ரிம50 ரிங்கிட்டையும் மாநில அரசு ரிம30 ரிங்கிட்ட்டையும் உதவித் தொகைகளாக வழங்குகின்றன.
தனியார் மையங்களில் கூடுதல் கட்டணம், ரிம150-லிருந்து ரிம200வரை வாங்குகிறார்கள் என்று லிம் கூறினார்.
‘வராமல் தடுப்பதே மேல்’
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நடத்தும் சிறுநீரகச் சுத்திகரிப்பு மையங்களை அமைக்க தமது அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு நாளாகும்.
“இதை அமைக்கவே ஐந்தாண்டுகள் ஆனது. மாநில அரசும் அதன் தனியார்துறை பங்காளியும் மேற்கொண்ட விடாமுயற்சியால் இது சாத்திமானது.
“நாங்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற முயற்சியை மேற்கொள்வோம். ஆனாலும், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சிகிச்சையைவிட நோய்வராமல் தடுப்பதே மேலானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
“எனவே, மக்கள் சீனியின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்”, என்றவர் அறிவுறுத்தினார்.