தேர்தலுக்குப் பின்னர் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எரியூட்டப் போவதாக மருட்டல்

lynasகுவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் இயங்குமானால் அதற்கு எரியூட்டப் போவதாக ஹிம்புனான் ஹிஜாவ் என்ற சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் வோங் தாக் மருட்டியுள்ளார்.

பிஎன் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் அல்லது புதிய கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் அமைத்தாலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 30 நாட்களில் அந்தத் தொழில் கூடம் மூடப்படா விட்டால் தாமே நேரடியாக அதற்கு எரியூட்டப் போவதாக வோங் சொன்னார்.

லைனாஸ் தொழில் கூடத்தை மூடுவதற்கான கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும் அவர் மருட்டினார்.lynas1

“நாங்கள் பக்காத்தானை ஆதரிக்கிறோம். காரணம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த அரிய மண் சுத்திகரிப்பு கூடத்தையும் புக்கிட் கோமான் தங்கச் சுரங்கத்தையும் மூடுவதாக அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார்.

“நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதனால் டிசம்பர் 31ம் தேதி அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்பு ஆர்பாட்டம் நடத்திய பின்னர் நாங்கள் எந்த ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப் போவதில்லை.”

“அதற்குப் பதில் நாங்கள்  பொதுத் தேர்தலில்ஜனநாயக ரீதியில் வேலை செய்து பிஎன் -னை வீழ்த்தி புதிய அரசாங்கம் அமைவதற்கு பக்காத்தானுக்கு உதவ  தயாராக இருக்கிறோம்,” என அவர் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வோங் குவாந்தானில் பிகேஆர் நிகழ்வு ஒன்றில் பேசினார்.

வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தானுகாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு ‘பாகாங் பசுமைப் பெருவழி’ என அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளில் பிஎன் தோல்வி அடைவதைக் காண ஹிம்புனான் ஹிஜாவ் உறுதிபூண்டுள்ளது.

லைனாஸ் தொழில் கூடத்துக்கு எரியூட்டுவது என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் அந்தத் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் தடுப்பதே ஹிம்புனான் ஹிஜாவின் ஒரே நோக்கம் என்பதால் அந்த நடவடிக்கை யாருக்கும் காயத்தை ஏற்படுத்தாது என்றும் வோங் சொன்னார்.

எந்தச் சட்டப்பூர்வப் பொறுப்பையும் ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அந்தச் சுற்றுச்சூழல் போராளி தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்திய வோங்,” சுற்றுச்சூழல் போராளி என்னும் பணியே எனக்குப் பொருத்தமானது,” என்றார்.

 

TAGS: